Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கூடாரத்தில் வகுப்புகள் நடப்பதை தவிர்க்க மாநகராட்சி ஆரம்ப பள்ளிகளில் 125 தற்காலிக வகுப்பறைகள்

Print PDF

தினகரன்             07.12.2010

கூடாரத்தில் வகுப்புகள் நடப்பதை தவிர்க்க மாநகராட்சி ஆரம்ப பள்ளிகளில் 125 தற்காலிக வகுப்பறைகள்

புதுடெல்லி, டிச. 8:டெல்லி மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் ஆரம்பப்பள்ளிகளில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததால், பல பள்ளிகளில் கூடாரம் (டென்ட்) அமைத்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரப்படுகிறது. இந்த அவலத்தை தீர்க்கக் கோரும் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி மன்மோகன் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் நடந்து வருகிறது.

இநத வழக்கு முதலில் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி ஆரம்பப்பள்ளிகளில் கூடாரங்களில் வகுப்புகள் நடத்துவதை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஒரு குழுவை நீதிபதிகள் நியமித்தனர்.

அதைத் தொடர்ந்து அக்குழுவினர் ஆரம்பப் பள்ளிகளில் ஆய்வு நடத்தி, 41 பள்ளிகளில் கூடாரங்களில் வகுப்புகள் நடப்பதாக தெரிவித்திருந்தனர். "கூடாரத்துக்கு வந்து ஆசிரியர்களும் சரிவர பாடம் நடத்துவதில்லை. அதனால் ஏழை மாணவர்களின் கல்வி கற்கும் உரிமை பறிக்கப்படுகிறது" என்றும் குழு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அந்த அறிக்கை கடந்த 1ம்தேதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதைக் கேட்ட நீதிபதிகள், "கூடாரங்களில் ஆரம்பப்பள்ளிகளை நடத்தும் மாநகராட்சியை கடுமையாக கண்டிக்கிறோம். அந்தப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த உடனடியாக உயர்த்தாவிட்டால், ரூ.5 லட்சம் வரையில் மாநகராட்சிக்கு அபராதம் விதிப்போம் என எச்சரிக்கிறோம். அபராதத் தொகையை மாநகராட்சி அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிடுவோம். எனவே, கூடாரங்களில் வகுப்புகள் நடக்கும் பள்ளிகளில் தற்காலிக வகுப்பறைகளை (போர்டபிள் கேபின்) உடனடியாக அமைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மகேந்தர் நாக்பால் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 45 ஆரம்பப் பள்ளி வளாகங்களில் இந்த ஆண்டு இதுவரையில் 645 வகுப்பறைகளை கட்டி முடித்துள்ளோம். இதுதவிர, 41 நகராட்சி ஆரம்பப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் 3 மாதம் முதல் 9 மாதங்களுக்குள்ளாக முடிந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதன்பிறகு, கூடாரங்களில் மாணவர்கள் படிக்கும் நிலை முடிவுக்கு வரும். கூடாரங்களில் வகுப்புகள் நடக்கும் பள்ளிகளில், நீதிமன்ற உத்தரவுப்படி 125 தற்காலிக வகுப்பறைகளை(போர்ட்டபிள் கேபின்) அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக, 20 புதிய தற்காலிக வகுப்பறைகளை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. வகுப்பறைகள் கட்டுமானப் பணி 6 மாதத்தையும் தாண்டி நடக்கும் என்ற நிலையில் உள்ள பள்ளிகளில் இந்த தற்காலிக வகுப்பறைகளை அமைக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.