Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளஸ் 2 தேர்வில் 1000க்கு மேல் எடுத்தால் மேற்படிப்புக்கு நிதியுதவி மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினகரன்                  10.12.2010

பிளஸ் 2 தேர்வில் 1000க்கு மேல் எடுத்தால் மேற்படிப்புக்கு நிதியுதவி மாநகராட்சி கமிஷனர் தகவல்

மதுரை, டிச. 10: பிளஸ் 2 தேர்வில் ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண் பெறும் மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியருக்கு இன்ஜினியரிங், மருத்துவம் உள்பட உயர் கல்வி படிக்க நிதி உதவி வழங்குவதற்கான விண்ணப்பம் வழங்கும் விழா நேற்று நடந்தது.

மதுரை மாநகராட்சி மற்றும் வெள்ளையன் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் ஈ.வே.ரா பள்ளியில் நடந்த விழாவுக்கு அறக்கட்டளை நிறுவனர் ஜெகதீசன் தலைமை வகித்தார். திட்டத்தைத் தொடங்கி வைத்து மாநகராட்சி ஆணையர் செபாஸ்டின் பேசியதாவது:

மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித்தரம் தனியார் பள்ளிக்கு இணையாக உயர்ந்துள்ளது. இதனை மேலும் உயர்த்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1000 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு இன்ஜினியரிங், மருத்துவம் உள்பட உயர்கல்விக்கு நிதி உதவி செய்யப்படும். விண்ணப்பம் பெறுவது முதல் கல்லூரியில் சேருவதற்கான அனைத்து உதவியையும் இந்த அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கப்படும். ஒரு மாணவருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த நிதியைப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சித் தலைமைப் பொறியாளர் சக்திவேல், மாநகராட்சி கல்வி அதிகாரி வைத்தியலிங்கம், உதவிக் கல்வி அலுவலர் வெள்ளத்தாய் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.