செட்டிச்சாவடிக்கு பெங்களூரு மேயர், அமைச்சர் விசிட்

Thursday, 26 September 2013 12:12 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினமலர்              26.09.2013

செட்டிச்சாவடிக்கு பெங்களூரு மேயர், அமைச்சர் விசிட்

சேலம்: சேலம் மாநகராட்சி சார்பில், செட்டிச்சாவடியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, நேற்று பெங்களூரு மேயர், அமைச்சர், கவுன்சிலர் ஆகியோர் பார்வையிட்டு சென்றனர்.

செட்டிச்சாவடியில், சுகாதார சீர்கேடு, மின்தடை பிரச்னை ஆகியவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்காத தனியார் நிறுவனம், தங்கள் கிளையை மட்டும் விரிவுப்படுத்துவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவது, பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், செட்டிச்சாவடியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, குஜராத்தை சேர்ந்த என்விரோ புரெக்சன் இன்ப்ராஸ்டரக்சர் லிமிடெட், சூரத் என்ற நிறுவனத்துக்கு, 20 ஆண்டு கட்டி இயக்கி உரிமம் மாற்றுதல் முறையில், செயல்படுத்த, 2008ம் ஆண்டு உத்தரவு வழங்கப்பட்டது.

கடந்த, ஐந்து ஆண்டாக, இதுவரை சோதனை ஓட்ட முயற்சியில், வெறும், 100 மெட்ரிக் டன் முதல், 150 மெட்ரிக் டன் வரையிலான குப்பைகள் மட்டுமே சேகரிக்கப்பட்டு, திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

செட்டிச்சாவடி பகுதியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதால், நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் தொடர்ந்து, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். குப்பை கொட்ட செல்லும் டிராக்டர்களை சிறைப்பிடித்து, தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

மேலும், மின்தடை பிரச்னை, இயந்திரங்களில் அடிக்கடி ஏற்படும் குளறுபடி ஆகியவற்றால், பல நாள் குப்பைகளை தரம் பிரித்தும் உரமாக்கும் பணியிலும் தொய்வு நிலை ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது, இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாகவும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. செட்டிச்சாவடியில் நிலவி வரும் பிரச்னையால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த பிரச்னைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய தனியார் நிறுவனம், தங்கள் கிளைகளை மட்டும் நாடு முழுவதும் பரப்புவதில் ஆர்வமாக இருக்கிறது. ஏற்கனவே இந்நிறுவனம், பெங்களூரில் எட்டு இடங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதனால், கடந்த இரண்டு ஆண்டாக அடிக்கடி பெங்களூருவை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் ஆகியோரை அழைத்து வந்து, திட்டத்துக்கான ஒப்புதல் பெறுவதற்கு, தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

தனியார் நிறுவனத்துக்கு, சேலம் மாநகராட்சி அதிகாரிகளும், "ஜால்ரா' போட்டு வருகின்றனர். தனியார் நிறுவனத்தின் அழைப்பை ஏற்று, சேலம் செட்டிச்சாவடிக்கு வரும் பெங்களூரு, "விருந்தினர்களை' கவனிக்கும் மாநகராட்சி அதிகாரிகள், தங்கள் அன்றாட பணிகளை விடுத்து, தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு, "சான்றிதழ்' வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை பெங்களூரு மாநகராட்சி மேயர் சத்தியநாராயணா, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, எதிர்கட்சி தலைவர் மஞ்சுநாத், பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் லட்சுமி நாராயணன் மற்றும் கவுன்சிலர்கள் பலர், செட்டிச்சாவடிக்கு அழைத்து வரப்பட்டனர். வழக்கம்போல, தனியார் நிறுவனமும், மாநகராட்சி அதிகாரிகளும், திட்டத்தை பற்றி பெருமையாக சொற்பொழிவாற்றினர்.

தென்னிந்தியாவில் கால் பதிக்க ஆர்வம்

குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனம், மேற்கு இந்திய பகுதிகளில், ராஜ்கோட், சூரத், ஜுனாகத், வதேரா, பவனாகர், ஜம்நகர், மிரா பயந்தர், புனே, விரர், ஜலகான், தானே, நாக்பூர் ஆகிய பகுதிகளிலும், வடக்கு இந்தியாவில் குவாலியர், பரிதாபாத், ஆக்ரா, பரேலி, கசியாபாத், அமிர்தசர், கிழக்கு இந்தியாவில் சங்கர், மங்கள் பூர், அசன்சோல் ஆகிய பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

தென்னிந்தியாவில், சேலத்தில் மட்டுமே செயல்படுத்தி வருகிறது. அதனால், பெங்களூருவில் எப்படியாவது கால் ஊன்ற வேண்டும் என்பதில் குறியாக செயல்படுகிறது. அதனால், திட்டத்தின் பின்னடைவு குறித்து, பெங்களூரு அரசியல் கட்சியினரிடம் அவர்கள் தெரிவிப்பதில்லை.