Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அனைத்து வார்டுகளிலும் தலா 2 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும்

Print PDF
தினமணி        23.04.2013

கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அனைத்து வார்டுகளிலும் தலா 2 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும்

திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அனைத்து வார்டுகளிலும் தலா இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும் என மேயர் விஜிலா சத்தியானந்த் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இம்மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம், மேயர் விஜிலா சத்தியானந்த் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பூ. ஜெகநாதன், ஆணையர் மு. சீனி அஜ்மல்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலத் தலைவர்கள் எம்.சி. ராஜன், மாதவன் ராமானுஜம், பி. மோகன், எஸ்.கே.ஏ. ஹைதர் அலி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி தீர்மானங்கள்:

வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா அல்லாத பிற மாவட்டங்களுக்கும் வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் மூலம் ரூ. 1755 கோடி வறட்சி நிவாரணம் அறிவித்தது மற்றும் திருநெல்வேலி நகரம் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையை, பார்வதி திரையரங்கில் இருந்து அருணகிரி திரையரங்கு அருகில் உள்ள குறுக்குத்துறை சாலையுடன் இணைக்கும் திட்ட சாலை அமைப்பதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிட்டது ஆகியவற்றிற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து மேயர் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த இரு தீர்மானங்களும் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.

இரங்கல் தீர்மானம்:


தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.எஸ். சங்கர் வலியுறுத்தினார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர் விஜயன் ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

பாதாள சாக்கடை திட்டம்:

விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என அ.தி.மு.க. உறுப்பினர் பரமசிவன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மேயர், இது தொடர்பாக தனியார் நிறுவனம் மூலம் திட்ட அறிக்கை தயாரிககப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் இறுதி அறிக்கை சமர்பிக்கப்படும். அதன்பிறகு அரசிடம் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் விரைவில் தொடங்கும் என்றார் மேயர்.

ஆழ்குழாய் கிணறுகள்:


காங்கிரஸ் உறுப்பினர் உமாபதி சிவன் பேசுகையில், கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. இதனை சமாளிக்க அனைத்து வார்டுகளிலும் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.

இதற்கு பதலளித்த மேயர், மேலப்பாளையம் மண்டலத்தை தவிர (அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்டது) மற்ற மூன்று மண்டலங்களிலும் உள்ள அனைத்து வார்டுகளிலும் தலா இரண்டு இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் போடப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மேயர், வரும் கல்வி ஆண்டு முதல் ராணி அண்ணா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி வகுப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

விளம்பர பலகைகள்:

மாநகர பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளால் மாநகராட்சிக்கு ஏற்படும் வருவாய் இழப்பு குறித்து அ.தி.மு.க. உறுப்பினர் பரணி சங்கரலிங்கம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஆணையர் சீனி அஜ்மல்கான், மாநகராட்சி பகுதியில் முறையாக அனுமதி பெற்ற சில விளம்பர பலகைகள் உள்ளன. ஆனால் அனுமதி பெறாமலும் சில விளம்பர பலகைகள் உள்ளன. மேலும் அனுமதி பெறப்பட்ட அளவை விட பெரிய அளவிலும் சில விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகளும் இன்னும் 15 நாள்களுக்குள் போலீஸ் உதவியுடன் அகற்றப்படும் என்றார் அவர். தொடர்ந்து சாதாரண மற்றும் அவசர கூட்டப் பொருளில் உள்ள அனைத்து தீர்மானங்களும் உறப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.