Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாஸ்டர் பிளான் சட்டம் நீலகிரியின் தன்மைக்கேற்ப நடைமுறைப்படுத்த வேண்டும்

Print PDF

தினமணி    28.05.2010

மாஸ்டர் பிளான் சட்டம் நீலகிரியின் தன்மைக்கேற்ப நடைமுறைப்படுத்த வேண்டும்

உதகை மே 27: நீலகிரி மாவட்டத்தில் அடுத்த ஆண்டிலிருந்து புதிய மாஸ்டர் பிளான் திட்டம் அமலுக்கு வரவிருப்பதால், இம்மாவட்டத்தின் தன்மைக்கேற்ப

நாட்டின் பிற மலை மாவட்டங்களில் உள்ள மாஸ்டர் பிளான் சட்டத்தைப் போலவே இங்கும் நடைமுறைப்படுத்த வேண்டுமென, உதகையில் நடைபெற்ற அனைத்துப் அரசியல் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் முறையான அனுமதியற்ற கட்டடங்கள் மற்றும் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் என சுமார் 2,000-க்கும் அதிகமான கட்டடங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு, அவற்றை இடிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந் நிலையில் தமிழக அரசு இப் பிரச்னையில் தலையிட்டு ஒருமுறை சிறப்பு அனுமதியளித்து அந்த கட்டடங்களை வரன்முறைப்படுத்த வேண்டுமென கடந்த டிசம்பர் மாதத்தில் நீலகிரி மாவட்ட அனைத்துó அரசியல் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைக்குழு, முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தது.

நீலகிரி மக்களவையின் முன்னாள் உறுப்பினர் ஆர்.பிரபு தலைமையிலான இக்குழுவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வரும் உறுதியளித்தார். தொடர்ந்து தமிழக அரசின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கிலும் தனது கருத்தை தெரிவித்தது. இதனால் அந்த கட்டடங்களை இடிக்கும் பணிகள் அப்போது நிறுத்தப்பட்டன.

இந் நிலையில் கட்டட இடிப்புப் பிரச்னை மீண்டும் தலைதூக்கியதால் அனுமதியற்ற மற்றும் விதிகளை மீறிய கட்டடங்களுக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைக் குழுவிடம் தமிழக அரசு ஏற்கனவே அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துவதென தீர்மானிக்கப்பட்டு, இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடமும் இக்குழுவினர் நேரில் சந்தித்து விவாதித்தனர்.

தொடர்ந்து கடந்த 15ம் தேதி முதல்வரையும் இக்குழுவினர் நேரில் சந்தித்தனர். அப்போது மத்திய அமைச்சர் ஆ.ராசா, தமிழக அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன், முன்னாள் அரசு தலைமைக் கொறடா பா.மு.முபாரக், குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சவுந்திரபாண்டியன், துணை முதல்வரின் செயலர் தீனபந்து, குடிநீர் வழங்கல் துறை செயலர் நிரஞ்சன் மார்டி, உதகை நகராட்சி தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் ரவிக்குமார் ஆகியோருடன் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இடம் பெற்றிருந்தனர்.

அந்த ஆலோசனையின்போது நீலகிரி மாவட்டத்தில் புதிய கட்டடங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகளைக் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக உதகையில் வியாழக்கிழமை அனைத்துó அரசியல் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைக்குழு அமைப்பாளர் ஜே.பி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக சர்பில் நகர்மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார், காங்கிரஸ் கட்சியின் சார்பில் கெம்பையா, மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்.பத்ரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெள்ளி உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதிமுகவினர் மட்டும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

நீலகிரி மாவட்டத்திலுள்ள விதி மீறிய மற்றும் அனுமதியின்றி கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களையும் தற்போது இருக்கும் சிறப்பு விதியைப் பயன்படுத்தி ஒருமுறை வரன்முறைப்படுத்துவதற்கான முயற்சிகளை கொள்கை அளவில் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக அனைத்து கட்டட உரிமையாளர்களும் தங்களது வரைபட சான்றுகளுடன் அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

தற்போது நடைமுறையிலுள்ள மாஸ்டர் பிளான் சட்டம் இவ்வாண்டுடன் முடிவடைந்து புதிய மாஸ்டர் பிளான் சட்டம் 2011ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வர இருப்பதால் அந்த சட்டத்தை நீலகிரி மாவட்டத்தின் தன்மைக்கேற்ப நடைமுறைப்படுத்தும் நோக்குடன் இந்தியாவில் உள்ள பிற மலை மாவட்டங்களான டார்ஜிலிங், சிம்லா உள்ளிட்ட இடங்களுக்கு அரசின் சார்பில் ஒரு குழு சென்று நேரில் ஆய்வு செய்து அங்குள்ளதைப் போலவே நீலகிரியிலும் அமல்படுத்த வேண்டும்.

விதி மீறிய மற்றும் அனுமதியற்ற கட்டடங்களுக்கு ஒருமுறை மட்டுமே அரசு சிறப்புஅனுமதி அளித்து கட்டடங்கள் வரன்முறைப்படுத்தப்படும். அதனால், இதை தொடர் நடவடிக்கையாக கருதி விடக்கூடாது. நீலகிரி மாவட்டத்தில் வணிகமயமாதலை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், மாவட்த்தின் பசுமைத்தன்மை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.