Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தஞ்சையில் 20 இடங்களில் பயணிகள் நிழல்குடை

Print PDF

தினமணி 01.08.2009

தஞ்சையில் 20 இடங்களில் பயணிகள் நிழல்குடை

தஞ்சாவூர், ஜூலை 31: தஞ்சையில் 20 இடங்களில் பயணிகள் நிழல்குடை அமைக்க, மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் வெள்ளிக்கிழமை நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சை நகரின் பிரதான சாலைகளில் பல்வேறு இடங்களில் பயணிகள் நிழல்குடைகள் இல்லாமல், பயணிகள் வெயில், மழை என்று சிரமப்பட்டு வருகின்றனர். ஆன்மிக தலங்களும், சுற்றுலா சிறப்புமிகு பகுதிகளும் நிறைந்த தஞ்சாவூர் நகருக்கு நாளுக்குநாள் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சுற்றுலா அபிவிருத்திக்காக நகரின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவது பிரதானமாகக் கருதப்பட்டது. அதன்படி, பயணிகள் நிழல்குடைகள் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய தீர்மானித்த ஆட்சியர், நகரின் முக்கிய பகுதிகளுக்கு நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

நாஞ்சிக்கோட்டை சாலை பிரிவு விஜயா திருமண மண்டபம் அருகே, மாவட்ட ஊனமுற்றோர் அலுவலகம் அருகே, சுந்தரம் நகர், முனிசிபல் காலனி ஆகிய இடங்களில் சாலையின் இருபுறமும் நிழல்குடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை சாலை சிவாஜி சிலை, மணிமண்டபம் அருகே மின் வாரிய அலுவலகம் முன், ரோகிணி மருத்துவமனை முன், சாந்தப்பிள்ளை கேட் மற்றும் ரயில்வே கீழ்ப்பாலம் அருகே ஆகிய இடங்களிலும் பயணிகள் நிழல்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் கூறியது:

மாவட்ட ஆட்சியரின் சிறப்பு நிதி, நகராட்சி வளர்ச்சி நிதி மற்றும் தனியார் பங்கேற்புடன் நகரின் பிரதான பகுதிகளில் 20 இடங்களில் பயணிகள் நிழல் குடைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகள் இன்னும் 15 நாள்களில் தொடங்கும். வேறு எந்தப் பகுதியிலும் நிழல் குடைகள் தேவையெனில் பரிசீலிக்கலாம் என்றார் சண்முகம்.

நகராட்சி ஆணையர் நடராஜன் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.