Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா: நீதிமன்றம் உத்தரவு

Print PDF

தினமணி 14.09.2010

ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா: நீதிமன்றம் உத்தரவு

மதுரை, செப்.13: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே 31 பேருக்கு 1996-ல் வீட்டுமனைப் பட்டா வழங்கிய நிலத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை, மாவட்ட ஆட்சியர் 30 நாளில் நிறைவேற்றுமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள நெல்முடிக்கரை கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி உள்ளிட்ட 31 பேர் தாக்கல் செய்த மனு:

எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு 1996-ல் வீட்டுமனைப் பட்டா வழங்கியது. இதுவரை, மனையிடத்தை அதிகாரிகள் வழங்கவில்லை. மனையிடத்தை எங்களுக்கு ஒப்படைக்குமாறு உத்தரவிடவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.ஜெயபால் அளித்த தீர்ப்பு:

இந்த வழக்கு மிகவும் துரதிஷ்டவசமானது. பட்டா வழங்கப்பட்டு 14 ஆண்டுகளாகியும், இடத்தை அதிகாரிகள் வழங்கவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை உதவி இயக்குநர், சிறப்பு வட்டாட்சியர் ஆகியோரிடம் கேட்டபோது, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், நிலம் ஒப்படைக்கப்படவில்லை என மனுதாரர்களிடம் கூறி வருகிறனர்.

நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில், எந்த இடத்தில் ஒழுங்கீனம் நடந்ததோ, அதைச் சரிசெய்து நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, நீதிமன்றம் அப்போதே உத்தரவிட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகள் சட்டவிரோதமான காரியங்களைச் செய்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி, சிறப்பு வட்டாட்சியர் ஆகியோர் விதிமீறல்களைச் சரிசெய்து, நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து, நிலம் கையகப்படுத்தும் நடைமுறையை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் பொறுப்பின்றி பதிலளித்து வருகின்றனர்.

இதிலிருந்து நிலம் கையகப்படுத்தி வழங்குவதில், அதிகாரிகள் ஆர்வமின்றி இருப்பது தெரிகிறது. மனுதாரர்கள் ஏழைகளாக இருப்பதால் குரல் எழுப்பமுடியவில்லை. எப்படி இருந்தபோதிலும், 30 நாள்களுக்குள் நிலம் கையகப்படுத்த வேண்டும். அதிகாரிகள் முறையாகச் செயல்படுகின்றனரா என்பதை நீதிமன்றம் கண்காணிக்கும். கையகப்படுத்திய பின், நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.