Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முதல் கட்டமாக 10 லட்சம் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி

Print PDF

தினமணி 22.09.2010

முதல் கட்டமாக 10 லட்சம் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி

சென்னை, செப். 21: முதல் கட்டமாக 10 லட்சம் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி போடுவதற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் வறுமை கோட்டுக்குக் கீழ் அல்லாதவர்களுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி போடுவது தொடரும் என்றும் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவர், பன்றிக் காய்ச்சலை முழுவதுமாக தடுக்க, மருத்துவக் குழு அமைத்து, வீடு, வீடாகச் சென்று ஏழை, பணக்காரர் என அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும். இந்த நடவடிக்கையை எடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

அதன்படி, நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ராஜாகலிஃபுல்லா ஆஜராகி பதில் மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

கிண்டியில் உள்ள கிங் மருத்துவ நிறுவனம் மற்றும் 9 தனியார் ஆய்வுக் கூடங்களில் பன்றிக் காய்ச்சல் நோயைக் கண்டுபிடிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 1.55 கோடி மதிப்பிலான சிறப்பு மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆய்வுக் கூடங்களை வலுப்படுத்த கூடுதலாக 2.49 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள், ஊசிகள் போன்றவை தேவையான அளவுக்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த நோயை எதிர்கொள்ளும் முறை பற்றி தனியார் மருத்துவர்களுக்கும் வழிகாட்டப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, சென்னை, வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இந்த நோய் பரவியுள்ளது. இந்த இடங்களில் வீடு வீடாகச் சென்று நோயைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நோய் தாக்கியவர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தனிமைப்படுத்தும் நிலை, அவர்களுக்கு தடுப்பு மருந்து கொடுப்பது, சிகிச்சை அளிப்பது என நோய் தாக்கியவர்களைப் பிரித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதாரத் துறை தொடர்பான அதிகாரிகள் மூலம் இந்த நோயின் நிலை நாள்தோறும் கவனிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 3,596 நபர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 774 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களில் 635 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த நோய் தாக்கி 9 பேர் இறந்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இலவச தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு 15 கோடி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடரும்.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த நோய் தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பற்றிய விவரங்களை அரசு அளிக்க வேண்டும் என்று கூறி, இந்த வழக்கை அக்டோபர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.