Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாற்று திறனாளிகளுக்கு மெரினாவில் தனிப்பாதை

Print PDF

தினகரன் 01.10.2010

மாற்று திறனாளிகளுக்கு மெரினாவில் தனிப்பாதை

மாற்று திறனாளிகள் கடற்கரை அருகில் சென்று கடல் அலைகளை கண்டுகளிக்க மரப்பலகையிலான தனிப்பாதை அமைக்க மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது.

இதுகுறித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை காமராஜர் சாலையின் கிழக்கு பக்க கடற்கரை பகுதியில் அனைவரையும் கவரும் வகையில் ரூ.24.52 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்டுள்ளது. அழகிய நீருற்றுகள், கடல் அலைகளின் அழகை கண்டுகளிக்கும் வகையில் அமர்வு மேடைகள், அழகிய புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளும் குறிப்பிட்ட அமர்வு மேடைகளுக்கு சென்று அமர்ந்து கடற்கரையின் அழகை கண்டுகளிக்க வசதியாக அமர்வு மேடைகளுக்கு செல்லும் பாதை கிரானைட் கற்களால் சாய்வு தளமாக அமைக்கப்பட்டுள்ளன. நடைபயிற்சி செய்பவர்களுக்கு வசதியாக நடைபாதையில் அவர்கள் செல்லும் வழியில் படிக்கட்டுகள் தவிர்க்கப்பட்டு சாய்வு தளமாகவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதைகளிலும், அமர்வு மேடைகளிலும் இருந்து கடற்கரை அழகை ரசிப்பது மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

இருப்பினும், மாற்றுத் திறனாளிகள் கடற்கரையின் அருகில் சென்று கடல் அலைகளை ரசிக்கும் வகையில் மரப்பலகையிலான தனிப்பாதை ஏதாவது அமைத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று கவுன்சிலர்கள், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வருகின்றன. இதை மாநகராட்சி பரிசீலித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Last Updated on Friday, 01 October 2010 11:42