Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தமிழகம் முழுவதும் பிளாட்பாரவாசிகளின் விவரம் புகைப்படத்துடன் சேகரிப்பு

Print PDF

தினகரன்                  01.11.2010

தமிழகம் முழுவதும் பிளாட்பாரவாசிகளின் விவரம் புகைப்படத்துடன் சேகரிப்பு

வேலூர், நவ.1: தமிழகம் முழுவதும் பிளாட்பாரத்தில் வசிப்பவர்கள் குறித்த தனிநபர் விவரங்கள் புகைப்படத்துடன் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளது.

நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் பிளாட்பாரத்தில் தனியாகவும், குடும்பங்களாவும் பலர் வசிக்கின்றனர். மழை, குளிர் காலங்களில் எந்த பாதுகாப்பும் இன்றி தவிக்கும் இவர்களுக்கு வாழ்வுரிமை அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்தந்த மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி மாநகராட்சி மற்றும் நகராட்சி பிளாட்பாரங்களில் வசிப்பவர்களை கணக்கெடுத்து அறிக்கை அளிக்க தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.

மேலும், இவர்கள் தங்குவதற்காக மாநகராட்சி, நகராட்சி சார்பில் விடுதிகள் அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும். அங்கு ஒவ்வொருவருக்கும் உடைகள், பொருட்கள் வைத்துக் கொள்ள தனி லாக்கர், குளியலறை, கழிவறை வசதி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி பிளாட்பாரங்களில் வசிப்பவர்கள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஜூலை மாதம் நடத்தி முடிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 115 பேர் பிளாட்பாரங்களில் வசிப்பது தெரிய வந்தது. இவர்களுக்காக இன்பென்டரி சாலையில் ரூ.9.80 லட்சத்தில் தங்கும் விடுதி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யவும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், பிளாட்பாரத்தில் வசிப்பவர்களின் தனி நபர் விவரங்கள் புகைப்படத்துடன் சேகரித்து அளிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 25 கேள்விகள் அடங்கிய பட்டியல் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.

அதில் தனி நபரின் பெயர், வயது, பாலினம், எந்தப்பகுதி பிளாட்பாரத்தில் தங்குகிறார், திருமணம் ஆனவரா, தங்கும் விடுதியில் சலுகை கட்டணம் செலுத்த முடியுமா?, தொழில், வாக்காளர் அட்டை, மருத்துவ காப்பீடு என ஏதாவது அடையாள அட்டை வைத்துள்ளாரா? தங்கும் விடுதியில் வேறு என்ன வசதி வேண்டும் என்ற கேள்விகள் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலுடன் வேலூர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் முருகன், பாலமுருகன், லூர்துசாமி, சிவக்குமார் உள்ளிட்டோர் விவரங்களை சேகரிக்கும் பணியை தொடங்கினர். ‘பிளாட்பாரத்தில் தங்கி உள்ளவர்களின் விவரங்கள் புகைப்படத்துடன் சேகரிக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சியில்தான் அதிகபட்சமாக 115 பேர் பிளாட்பாரத்தில் தங்கியுள்ளனர். இவர்களின் விவரங்கள் புகைப்படத்துடன் ஓரிரு நாளில் தயார் செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும்என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.