Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் வாரியத்துக்கு ஆணையம் உத்தரவு ஊழியர்கள் சொத்து விவரம் இணையத்தில் வெளியிட வேண்டும்

Print PDF

தினகரன்                  04.11.2010

குடிநீர் வாரியத்துக்கு ஆணையம் உத்தரவு ஊழியர்கள் சொத்து விவரம் இணையத்தில் வெளியிட வேண்டும்

புதுடெல்லி, நவ. 4: அரசு ஊழியர்கள் சொத்து விவரத்தை வெளியிடுவது கட்டாயம் என்பதால், டெல்லி குடிநீர் வாரியம் தனது ஊழியர்களின் சொத்து விவரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ராம்குமார் குப்தா என்பவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் டெல்லி குடிநீர் வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றும் எம்.சி.யாதவ் என்பவரின் சொத்து விவரங்களை கேட்டிருந்தார். எம்.சி.யாதவிடம் சொத்து விவரத்தை தருவது குறித்து குடிநீர் வாரியம் பதில் கேட்டது. ஆனால், இது தன்னுடைய தனிப்பட்ட விவகாரத்தில் தலையிடும் செயல் என்பதால், சொத்து விவரத்தை தரக்கூடாது என்று அவர் ஆட்சேபம் தெரிவித்தார். இந்த விவரம் ராம்குமார் குப்தாவுக்கு அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர், மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை மத்திய தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி விசாரித்து தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:

அரசு ஊழியர்கள் தங்களுடைய சொத்து விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் துறையிடம் தரவேண்டும் என்பதும், அரசும் ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களிடம் சொத்து விவரத்தை பெற வேண்டும் என்பதும் விதியாக உள்ளது. அரசு ஊழியர்கள் என்பவர்கள் பொது ஊழியர்களாகிறார்கள். அவர்களின் சொத்து விவரங்களை அரசிடம் இருந்து பொதுமக்கள் பெறுவதில் எந்த தடையும் இல்லை.

அரசு ஊழியர்கள் என்பவர்கள், தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வருபவர்களும் அடங்குவார்கள் என்று இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல் வழங்கி உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், எம்.சி.யாதவின் ஆட்சேபத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. இதுபோன்று வேறு சில ஊழியர்களின் சொத்து விவரங்களையும் கேட்டு வருங்காலத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்படும் வாய்ப்பு உள்ளதால், டெல்லி குடிநீர் வாரியத்தில் பணியாற்றும் எல்லா ஊழியர்களின் சொத்து விவரங்களையும் அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மக்கள் தொடர்பு அதிகாரி எடுக்க வேண்டும். டிசம்பர் 15ம் தேதிக்கு முன்னதாக இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும்.