Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீட்டு வசதி வாரியம் மூலம் வீடு வாங்க மானிய வட்டியில் கடனுதவி

Print PDF

தினமணி               10.11.2010

வீட்டு வசதி வாரியம் மூலம் வீடு வாங்க மானிய வட்டியில் கடனுதவி

விருதுநகர், நவ 9: விருதுநகர் மாவட்டத்தில் நகர்புறத்தில் வசிக்கும் ஏழை, எளியவர்கள் வீடு வாங்க மற்றும் கட்ட மானிய வட்டியில் ரூ. 1 லட்சம் கடன் உதவி அளிக்கப்படுகிறது. அதற்கு ஏழை, எளியவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வே..சண்முகம் தெரிவித்துள்ளார்.

நகரத்தில் வசிக்கும் ஏழை, எளியவர்கள் வீடு கட்டவும், புதிய வீடுகள் வாங்கவும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மதுரை வீட்டு வசதிப் பிரிவு மூலம் மானிய வட்டியில் கடனுதவி அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் கடன் பெறுவதற்கு ஏழை, எளியவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதியில் வசிக்கின்ற மாத வருமானம் ரூ. 5 ஆயிரத்திற்குள் உள்ள நலிவுற்ற பிரிவினருக்கும், மாத வருமானம் ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

இவர்களுக்கு ரூ. 1 லட்சம் முதல், ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் வரை கடன் அளிக்கப்படும். இத் தொகையை 15 முதல் 20 ஆண்டுகளில் திரும்பச் செலுத்த வேண்டும். இந்தக் கடன்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்படும். கடன் தொகைக்குரிய வட்டித் தொகையில் 5 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

கூடுதலாகக் கடன் தேவைப்படுகிறவர்களுக்கு கூடுதல் தொகைக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காகக் கட்டப்படும் வீடுகள் குறைந்தபட்சம் 250 சதுர அடியாக இருக்க வேண்டும். குறைந்த வருமானம் உள்ள பிரிவினருக்கு கட்டப்பட்டும் வீடுகள் 400 சதுர அடியாக இருக்க வேண்டும்.

சொந்த வீடுகள் இல்லாதோர் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும். சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் அதற்குரிய பட்டா வைத்திருக்க வேண்டும். அரசு திட்டத்தின் மூலம் இலவச வீட்டுமனை பெற்றவர்களும் இந்தத் திட்டத்தில் பயனடையலாம்.

இது தொடர்பாக மேலும் விவரம் அறிய மதுரை எல்லீஸ் நகரில் உள்ள வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரை அணுக வேண்டும். அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் வே..சண்முகம் தெரிவித்துள்ளார்.