Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ 280 கோடி செலவில் கட்ட திட்டம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நெற்குன்றத்தில் 21 மாடி குடியிருப்பு

Print PDF

தினகரன்                 16.11.2010

ரூ 280 கோடி செலவில் கட்ட திட்டம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நெற்குன்றத்தில் 21 மாடி குடியிருப்பு

சென்னை, நவ.16: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 280 கோடி ரூபாய் செலவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்காக 21 அடுக்குமாடி குடியிருப்பை சென்னை புறநகரில் அமைக்கிறது. ஒவ்வொரு வீடும் குறைந்தது ஒரு கிரவுண்ட் பரப்பிற்கு கட்டப்படும்.

சென்னை புறநகர் பகுதியான நெற்குன்றத்தில் 13.2 ஏக்கரில் இந்த குடியிருப்பு அமையவுள்ளது. மொத்தம் ரூ280 கோடி செலவில் 21 அடுக்குமாடி கட்டப்படும். இவற்றில் தரை கீழ் தளம், தரைதளம் முழுக்க வாகனங்கள் நிறுத்தும் வகையில் அமைக்கப்படும். இந்த குடியிருப்பில் பரப்பளவை பொருத்து இரண்டு வகையான வீடுகள் அமைக்கப்பட உள்ளன.

முதல் வகை 2458 சதுர அடி கொண்ட வீடு. இதில் 4 படுக்கை அறைகள் உட்பட சமையல் அறை, சாப்பிடும் அறை, வரவேற்பு அறை, குடும்ப அறை ஆகியவை கொண்டதாக இருக்கும். அனைத்து படுக்கை அறைகளும் கழிவறை, குளியல் அறைகள் கொண்டவை. இதன் விலை 64 லட்சம் ரூபாய்.

இரண்டாவது வகை 1923 சதுர அடி உள்ள வீடு. இதில் மற்ற அறைகளுடன் 3 படுக்கை அறைகள் இருக்கும். இந்த வீட்டின் விலை 50 லட்சம் ரூபாய்.

குடியிருப்பை தவிர நீச்சல் குளம், பூங்கா, பொது அரங்கு, உடற்பயிற்சி கூடம், கடைகளும் அமைக்கப்பட உள்ளன. திறந்தவெளியில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதி கிடையாது.

வரும் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் கட்டுமான பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது.

விருப்பமுள்ளவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்க விண்ணப்பிக்கலாம் என்று இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு தனித்தனியே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சுற்றறிக்கையுடன் வீட்டின் மாதிரி வரைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது. வீடு வாங்க விரும்பும் அதிகாரி இம்மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பம் மற்றும் வைப்புத் தொகையாக ஒரு லட்ச ரூபாய் செலுத்தி பதிவு செய்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், 21 மாடி உயரக் குடியிருப்பை அமைப்பது இதுவே முதல் முறை.