Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மீனாட்சி கோவிலைச் சுற்றி உயரமான கட்டடம் கட்டலாம் : புதிய மாஸ்டர் பிளானின் அரசு அனுமதி

Print PDF

தினமலர்                 25.11.2010

மீனாட்சி கோவிலைச் சுற்றி உயரமான கட்டடம் கட்டலாம் : புதிய மாஸ்டர் பிளானின் அரசு அனுமதி

மதுரை : ""மதுரை நகரின் வளர்ச்சிக்கு புதிய "மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டுள்ளது,'' என நகர ஊரமைப்புத் துறை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கூறினார். மதுரையில் இத்துறை சார்பில், அதன் இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால், நேற்று மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களின் குறைகளை கேட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 1993ல் கொண்டு வரப்பட்ட மாஸ்டர் பிளான் தான், மதுரையில் இன்னமும் அமலில் உள்ளது. இந்த ஆண்டு புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்பு விவசாய பகுதியாக இருந்து, குடியிருப்பாக மாறிய பகுதிகள், குடியிருப்பாக இருந்து வணிக இடமாக மாறிய பகுதிகள் புதிய பிளானில் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்திடம் இருந்து பதில் வராததால், இரண்டாவது ரிங் ரோடு திட்டம், புதிய பிளானில் சேர்க்கப்படவில்லை. புதிய பிளான்படி, கட்டட அனுமதியை மதுரையிலேயே பெறலாம்.

இந்த ஜூன் முதல், கட்டடம் கட்டுவதில் (புளோர் ஸ்பேஸ் இன்டெக்ஸ் - எப்.எஸ்..,) சில மாறுதல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முன்பு 100 சதுர மீட்டர் இடம் இருந்தால், குடியிருப்பாக இருந்தால், 50 சதுர மீட்டருக்கும், வணிக கட்டடமாக இருந்தால் 40 சதவீதத்திற்கும் கட்டடம் கட்டிக்கொள்ளலாம். தற்போது இது குடியிருப்புக்கு 60 சதவீதமாகவும், வணிக கட்டடத்திற்கு 50 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு, அடுக்குமாடி கட்டடத்திற்கு தனி உத்தரவு பெற வேண்டி இருந்தது. இனிமேல் அதுவும் தேவையில்லை. மீனாட்சி கோவிலைச் சுற்றி வெளி வீதிகள் வரை, ஒன்பது மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடங்கள் கட்ட முடியாது. தற்போது அக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு விட்டது.

சாலை அகலத்தைப் பொறுத்து, கட்டடத்தின் உயரத்தை முடிவு செய்யலாம். உதாரணமாக, 12 மீட்டர் அகல சாலையாக இருந்தால், 24 மீட்டருக்கும், 15 மீட்டர் அகல சாலையாக இருந்தால், 30 மீட்டருக்கும், 18 மீட்டர் அகல சாலையாக இருந்தால் 60 மீட்டருக்கும் 30.5 மீட்டர் அகல சாலையாக இருந்தால், 60 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடம் கட்டலாம். நான்காயிரம் சதுர அடி அளவுள்ள கட்டடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளும், 15 ஆயிரம் சதுர அடி அளவுக்கு உள்ளூர் திட்டக் குழுமமும் அனுமதி தரலாம். அதற்கு மேல் அளவுள்ள கட்டட அனுமதியை சென்னை இயக்குனர் அலுவலகத்தில் பெற வேண்டும். இவ்வாறு பங்கஜ்குமார் பன்சால் கூறினார்.