Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி ஏலத்தில் கடை வாடகை உச்சம் 6 கடைகள் மூலம் கூடுதல் வருவாய்

Print PDF

தினமலர்              01.12.2010

மாநகராட்சி ஏலத்தில் கடை வாடகை உச்சம் 6 கடைகள் மூலம் கூடுதல் வருவாய்

சேலம்: சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான ஆறு கடைகள் நேற்று அதிகபட்ச வாடகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் கூடுதல் வருவாயாக கிடைக்கும். சேலம் மாநகராட்சி சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளிலும் மாநகராட்சிக்கு சொந்தமாக 500 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது.

இரண்டு ஆண்டுக்கு முன் நிதிநிலையை பெருக்க மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் கூடுதலாக கடைகள், வணிக வளாகங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சி கடைகளுக்கான ஏலத்தில் எப்போதும் ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதிக்கம் அதிகளவு இருக்கும். குறிப்பாக பிரதான பகுதிகளில் உள்ள கடைகள், காய்கறி மார்க்கெட், சைக்கிள் ஸ்டாண்டு ஆகியவற்றை கைப்பற்றுவதில் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கிடையே கூட மோதல் ஏற்படும் சூழல் உருவாகும். சில மாதங்களுக்கு முன் அஸ்தம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட நான்கு ரோடு பகுதியில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து ஆறு கடைகள் கட்டப்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன் கடைக்கு ஏலம் விடப்பட்டது. மாநகராட்சியில் நிர்ணயம் செய்த ஏலத் தொகையை செலுத்தி கடைகளை ஏலம் எடுக்க ஒரு சிலர் முன் வந்தனர். ஆனால், கட்சி பிரமுகர்களின் ஆதிக்கத்தால், ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் நேற்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஆறு கடைகளுக்கு மீண்டும் திறந்த வெளி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஒவ்வொரு கடைக்கும் சால்வன்சி மதிப்பு தொகை இரண்டு லட்சம் ரூபாயாகவும், மின் கட்டணத்துக்கான டெபாஸிட் தொகை 10 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

பிரதான பகுதியில் அமைந்துள்ள கடைகளை வாடகைக்கு எடுப்பதில் பலர் ஆர்வம் காட்டினர். நேற்று 25 க்கும் மேற்பட்டோர் ஏலத்தில் கலந்து கொண்டனர். மாநகராட்சி அதிகாரிகள் முன் ஏலம் நடத்தப்பட்டது. கடை எண் 1 செங்கோடன் என்பவர் 13 ஆயிரம் ரூபாய்க்கும்(மாத வாடகை), கடை எண் 2 கதிர் ராஜரத்தினம் எட்டாயிரம் ரூபாய்க்கும், கடை எண் 3 பொன்னி கூட்டுறவு அங்காடி சார்பில் 14 ஆயிரத்து 700 ரூபாய்க்கும், கடை எண் 4 நெப்போலியன் என்பவர் 16 ஆயிரத்து 300 ரூபாய்க்கும், கடை எண் 5 விஸ்வநாதன் என்பவர் 15 ஆயிரம் ரூபாய்க்கும், கடை எண் 6 வைரமணி என்வர் 8, 500 ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் புது பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் அதிகப்பட்சம் 7.000 ரூபாய்க்கும்(மாத வாடகை), பழைய பஸ் ஸ்டாண்டில் 5,000 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டுள்ளது. மாநகராட்சி வரலாற்றில் முதல் முறையாக கடைகள் 8,000 ரூபாயில் இருந்து 16 ஆயிரம் ரூபாய் வரைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு ஏலத்தொகையை நிர்ணயம் செய்ததே இதற்கு காரணமாகும். கடையை ஏலம் எடுத்தவர்கள் முன்பணம் மற்றும் சால்வன்சி தொகையை செலுத்தி சென்றனர். கடை வாடகை உச்சப்பட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடை அளவு 150 சதுர அடி: நான்கு ரோடு பகுதியில் அதிகப்பட்ச தொகைக்கு ஏலம் போன ஆறு கடைகளும் 150 சதுர அடி கொண்டதாகும். வழக்கமாக ஏலத்தின் போது கட்சி பிரமுகர்களின் ஆதிக்கம் இருக்கும். ஆனால், நேற்று ஆளுங்கட்சி பிரமுகர்கள் யாரும் இந்த பக்கம் தலைகாட்டாமல் ஆச்சர்யப்பட வைத்தனர். இரண்டு போலீஸார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எந்த பிரச்னையும் இல்லாமல் ஏலம் சுமூகமாக முடிந்தது.