Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு மேயர் தகவல்

Print PDF

தினகரன்       27.01.2011

மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு மேயர் தகவல்

சென்னை, ஜன.27:

மாநகராட்சி பட்ஜெட்டில், சுகாதாரம் மற்றும் கல்வித்துறையின் தரத்தை மேலும் உயர்த்திட அதிக நிதி ஒதுக்கி புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியின் 2011&2012ம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி மாதம் 15ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் மேயர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

கல்வி, சுகாதாரம், பேருந்து சாலைகள், உட்புறச் சாலைகள், மழைநீர் வடிகால்வாய், நிலம் மற்றும் உடைமைத்துறை, பூங்காக்கள், விளையாட்டரங்கம், பணியாளர் நலன், வருவாய்த்துறை போன்ற பல்வேறு துறைகளில், ஏற்கனவே 2010&2011ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த 122 அறிவிப்புகள் தொடர்பாகவும், அதிகாரிகளுடன் மேயர் ஆலோசனை நடத்தினர்.
அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 100க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதியுள்ள 22 திட்டங்களையும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், அதற்கான பணிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து நிறைவேற்ற வேண்டும் என்றும் மேயர் ஆணையிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் சென்னைப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த கடந்த 4 ஆண்டுகளாக பல கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆற்றல் சார் பள்ளிகள், மழலையர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச சீருடை, ஷூ போன்றவை வழங்கப்படுகிறது.

மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக மாநகராட்சி சுகாதாரத்துறை மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு இலவசமாக சிறப்புணவு அளித்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

சென்னை மாநகரம் மேலும் சிறப்பாக திகழ்ந்திட வரும் 2011&2012ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம் பெறும். இதில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.