Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் விவகாரம்: மாநகராட்சி மேயர் கருத்துக்கு கலெக்டர் வரவேற்பு

Print PDF

தினமலர்                31.07.2012

ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் விவகாரம்: மாநகராட்சி மேயர் கருத்துக்கு கலெக்டர் வரவேற்பு

தூத்துக்குடி : ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் விஷயத்தில் மாநகராட்சி மேயர் கருத்தை வரவேற்கிறேன். அவர் கூறியது போல் அந்த இடத்திற்குரிய பிரச்னைகளை அனைத்தும் மாவட்ட நிர்வாகம் சரி செய்து கொடுக்கும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் ஆஷீஷ்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது;

தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் குறித்து மாநகராட்சி மேயர் கூறிய கருத்துக்களை தினமலரில் படித்தேன். மீன்வளக்கல்லூரி எதிரே பஸ் ஸ்டாண்டிற்கு தேர்வு செய்துள்ள இடத்தில் உள்ள பிரச்னைகளை தீர்த்து கொடுத்தால் அங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க தயார் என்று மேயர் தெரிவித்திருக்கிறார்.

அவரது இந்த கருத்தை வரவேற்கிறேன்.முதல்வர் அறிவித்த திட்டம் என்பதால் அந்த இடத்தில் உள்ள சிறிய பிரச்னைகளை அகற்றுவது என்பது எளிது. இதனை மாவட்ட நிர்வாகம் விரைவாக செய்து கொடுக்கும். பஸ் ஸ்டாண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மீன்வளக்கல்லூரிக்கு எதிரே உள்ள இடத்தில் துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தை பெறுவதற்காக துறைமுக நிர்வாகத்துடன் பேசி வருகிறேன். அந்த இடத்திற்கு பதிலாக துறைமுகத்திற்கு மாவட்ட நிர்வாகம் இரண்டு ஏக்கர் மாற்று இடம் வழங்கிவிடும். பஸ் ஸ்டாண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் உப்பள பகுதி இடம் கிடையாது. டிரக் டெர்மினல் அமைக்கும் இடத்திற்கும் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் இடத்திற்கும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.
மதுரை ரோடு, திருச்செந்தூர் ரோடு, பாளை ரோடு, கிழக்கு கடற்கரை சாலை ரோட்டிற்கு இங்கு பஸ் ஸ்டாண்ட் அமைந்தால் எளிதாக செல்ல வசதி ஏற்படும். ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டிற்கு இந்த இடம் தான் "பெஸ்ட் சாய்ஸ்'. அதே சமயம் மாநகராட்சிக்கு இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு கொடுக்கும்.

தூத்துக்குடியில் ஏற்கனவே விளையாட்டு மைதானம் குறைவு. இதனால் தருவை மைதானத்தை அபிவிருத்தி செய்து வருகிறோம். இதனால் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு எடுப்பது என்பது சிரமமாகும். இதற்கு எதிர்ப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டிற்கு தேர்வு செய்துள்ள இடத்தை பெறுவதற்குரிய சிறிய, சிறிய பிரச்னைகள் விரைவில் களையப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் இனிமேல் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும். தற்போது ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மழை இல்லை என்றால் இவை நிறுத்தப்பட்டு விடும்.

இதனால் அணைத்தண்ணீர் குடிநீருக்கு மட்டும் திறக்கப்படும் என்பதால் குடிநீர் பிரச்னை இம் மாவட்டத்தில் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.