Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"ஒருங்கிணைந்த பஸ் நிலைய விவகாரம்: மேயர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்'

Print PDF
தினமணி                    31.07.2012

 "ஒருங்கிணைந்த பஸ் நிலைய விவகாரம்: மேயர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்'

தூத்துக்குடி, ஜூலை 30:  தூத்துக்குடியில் முதல்வர் அறிவித்த ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் மேயர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார்.

 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார்பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

  பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பது குறித்து மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா கருத்து கூறியிருப்பதை வரவேற்கிறேன்.

மீன்வளக் கல்லூரி எதிரே உள்ள இடம் தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதி, புறம்போக்கு நிலங்கள் உள்ள பகுதி, மின்வாரிய கோபுரங்கள்,  துறைமுகத்துக்குச் சொந்தமான இடம் என்பதால் அந்த இடத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க முடியாது என சிலர் கருதுவதாக மேயர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அங்குள்ள மின்வாரிய கோபுரங்களை இடமாற்றம் செய்து கொள்ளலாம். புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்திக் கொள்ளலாம். துறைமுகத்துக்குச் சொந்தமான நிலத்தையும் பேச்சுவார்த்தை மூலம் எடுத்துக் கொள்ளலாம். இதில், பிரச்னைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. ஒருங்கிணைந்த பஸ் நிலையம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டத் திட்டம்.

மீன்வளக் கல்லூரி எதிரே ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டால் மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர் சாலைகள் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையை இணைக்கும் விதத்தில் அமையும்.

 தூத்துக்குடி நகரில் வளர்ச்சி மற்றும் வருங்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி மேயர் நல்ல ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடியில் இனிமேல் குடிநீர்ப் பிரச்னை ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாபநாசம், மணிமுத்தாறு அணையிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் தண்ணீர் குடிநீர் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தப்படும்.

விவசாயத்துக்காக ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து ஏற்கெனவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மழை பொய்த்து விட்டதால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை பெய்ததும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார் அவர்.

பேட்டியின் போது, மாவட்டவருவாய் அலுவலர் சு.அமிர்தஜோதி, மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் இனியன் ஆகியோர் உடனிருந்தனர்.
Last Updated on Tuesday, 31 July 2012 10:14