Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி கமிஷனர் முதல் ஊழியர் வரை 111 பணியிடம் காலி!

Print PDF

தினமலர்         31.08.2012

நகராட்சி கமிஷனர் முதல் ஊழியர் வரை 111 பணியிடம் காலி!

மேட்டூர்: மேட்டூர் நகராட்சியில், கமிஷனர் முதல் கடைமட்ட ஊழியர்கள் வரை, மொத்தம், 111 பணியிடம் காலியாக இருக்கிறது. இதனால், நகராட்சி நிர்வாக பணிகள், குடிநீர் வினியோகம், சுகாதாரம் என, அனைத்து பணிகளும் ஸ்தம்பித்துள்ளது.

மேட்டூர் நகராட்சியில், 30 வார்டுகளில், 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தமிழகத்தில் பெரிதான ஸ்டேன்லி அணை மற்றும் பூங்கா மேட்டூரில் இருப்பதால் தினமும், மேட்டூருக்கு பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதியில் அணை, மின் உற்பத்தி நிலையம் இருப்பதால் மற்ற பகுதிகளை விட மேட்டூரில் பொதுப்பணித்துறை ஊழியர்கள், மின் ஊழியர்கள் உள்பட அரசு ஊழியர்களே அதிகம் உள்ளனர்.ஆனால், தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழும் மேட்டூரில், ஆங்காங்கே செப்டிக் டேங்க உடைந்து ரோட்டில் ஓடும் கழிவு நீர், தேங்கி கிடக்கும் குப்பை என, சுகாதாரகேடாக காட்சியளிக்கிறது. இது நகராட்சி மக்களை மட்டுமின்றி, வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளையும் முகம் சுளிக்க வைக்கிறது.

இதற்கு மேட்டூர் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை, 111 பணியிடங்கள் காலியாக இருப்பது முக்கிய காரணமாகும். மேட்டூர் நகராட்சியில், ஏப்ரல் மாதம் முதல் கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது. இதுவரை கமிஷனர் பணியிடம் நிரப்பபடவில்லை.மேலும், ஒரு உதவி பொறியாளர், இரு துப்பரவு ஆய்வாளர், ஒரு நகரமைப்பு அலுவலர், ஒரு நகரமைப்பு ஆய்வர், ஐந்து இளநிலை உதவியாளர், இரு பிட்டர், நான்கு வருவாய் உதவியாளர், ஒரு பணி ஆய்வர், ஐந்து மின் பணியாளர், 42 துப்பரவு பணியாளர் உள்பட மொத்தம், 111 பணியிடங்கள் காலியாக உள்ளது.ஒவ்வொரு நகராட்சிக்கும் ஆண்டுதோறும் கிடைக்கும் வரி வருவாயில் குறிப்பிட்ட தொகை மட்டுமே ஊழியர்கள் சம்பளத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அந்த நிதி ஒதுக்கீடுக்கு ஏற்பவே பணியாளர்கள் நியமிக்க வேண்டும். மற்ற நகராட்சிகளில் சொத்துவரி, குடிநீர் வரி அதிகமாக கிடைப்பதால், அதற்கேற்ப பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், மேட்டூர் நகராட்சியின் பெரும்பகுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்ததாலும், அருகாமையில் அணை இருப்பதாலும், வீடுகளுக்கு பட்டா வழங்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் மேட்டூர் நகராட்சி பகுதியில் உள்ள, 70 சதவீத வீடுகளுக்கு பட்டா கிடையாது. பட்டா இல்லாத வீடுகளுக்கு சொத்து வரி குறைவாக இருக்கும்.இதனால், நகராட்சிக்கு ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் வரி இழப்பீடு ஏற்படுகிறது. இதனால், ஏராளமான பணியிடம் காலியாக இருந்தபோதிலும், பணியாளர்களை நியமிக்க முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறுகிறது. அதற்கேற்ப நகராட்சி நிர்வாக பணிகளும் ஸ்தம்பித்துள்ளது, மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.