Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பையும் எங்களுக்கு கோமேதகமே பணம் கொழிக்க வழிகாட்டும் ‘பனிமலர்’

Print PDF
தினகரன்            06.09.2012
 
குப்பையும் எங்களுக்கு கோமேதகமே பணம் கொழிக்க வழிகாட்டும் ‘பனிமலர்’
 

சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடான பிளாஸ்டிக் கழிவுகளை என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கிய அரசு நிர்வாகங்களுக்கு இப்போது தான்விடை கிடைத்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை கலந்து சாலை அமைக்கும் புதிய யுக்தி தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது.இத்திட்டத்திற்காகதமிழகஅரசு மட்டும் நடப்பு ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது.

தற்போது, பிளாஸ்டிக் கழிவுகளின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், ரோடு போடுவதற்கு பயன்படுத்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிளாஸ்டிக் கழிவுகளை உடைத்து அரவை செய்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வினியோகம் செய்கின்றனர் கோவை சரவணம்பட்டி பனிமலர் மகளிர் சுய உதவிக்குழுவினர். கடந்த 2004ம் ஆண்டில் தான் பனிமலர் மகளிர் சுய உதவிக்குழு உருவானது. முதலில் 14 பேர் ஒருங்கிணைந்து தையல்,எம்ப்ராய்டரி, டைப்ரைட்டிங் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு சம்பாதித்தனர். கூடுதலாக சம்பாதிக்க திட்டமிட்டனர். இது தொடர்பாக கோவை மாநகராட்சி சமூக சேவை சங்கத்தை அணுகினர்.

அங்கு பிளாஸ்டிக் கழிவுகளை பொடியாக்கி விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதை ஆலோசனையாக பெற்றனர். ஆனால் இந்த தொழிலில் பல கஷ்டங்கள் இருப்பதையும் உணர்ந்தனர்.ஆரம்பத்தில் இதை செய்வதற்கு ஆர்வத்துடன் வந்த பலர்,இதில் உள்ள சிரமங்களை பார்த்து படிப்படியாக விலகிக் கொண்டனர். ஆனால் ராணி, சாந்தி, செல்வி என மூன்று பேர் மட்டும் விடாப்படியாக இருந்து பல கஷ்டங்களையும் அனுபவித்து தற்போது இத்தொழிலை மிக நேர்த்தியுடன் நடத்தி வருகின்றனர். தனது அனுபவங்களை  பனிமலர் மகளிர் சுய உதவிக்குழுவின் பொறுப்பாளர் ராணிநம்மிடம் பகிர்ந்து கொண்டது

‘‘நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். கணவர் பேக்கரி ஒன்றில் மாஸ்டராக பணிபுரிகிறார். குடும்பத்திற்கு உதவியாக இருக்கவேண்டும் என்றுதையல் பயின்றேன். ஆனால், சொந்தமான தொழில்துவங்க வேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும் எனக்கு அதிகம். பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிபல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை எங்கள் குழு மூலம் நடத்தி வந்தோம். பிளாஸ்டிக் மறு சுழற்சியும், அதன் பயன்பாடு குறித்து தெரிந்து கொண்டோம். இந்த தொழில் செய்வதற்கு பெரும்பாலும் பெண்கள் முன்வருவதில்லை அதனாலேயே எனக்கு இதை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. முதலில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தோம்.

தற்போது மூன்று பேர் மட்டுமே இதனை செய்து வருகிறோம்.  வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து கிலோ 5 ரூபாய் என்று பிளாஸ்டிக் குப்பைகளைஎடுத்து வருவோம். அதனை பிளாஸ்டிக் குப்பைகளை தரம் வாரியாக பிரித்து காயவைப்போம் அதன் பின்பு  பிளாஸ்டிக் அரைவை மிஷன் உதவியுடன்  அதனை நன்கு அரைத்து பொடியாக செய்து அதனை ஒரு நாள் உலரவிட்டு பின் பேக் செய்து விடுவோம். சாலை அமைக்க பயன்படுத்தும் தாரில் பிளாஸ்டிக் பொடி கலக்கப்படுகிறது.பொடியை  கலக்குவதன் மூலம் தார் சாலையின் ஆயுட்காலம் அதிகரிக்கும். இதன் மூலம்சாலையில் விரிசல் ஏற்படுவது குறைக்கப்படுகிறது.  

பிளாஸ்டிக் பொடியை போடுவதற்காகமாநகராட்சியோ, பஞ்சாயத்து அல்லது ஒப்பந்தகாரர்கள்கிலோ 15 ரூபாய்க்கு வாங்கி செல்வார்கள். ஒரு கிலோவிற்கு ரூபாய் 10 வரை லாபம் கிடைக்கும். இதில் நல்ல வருமானம் உள்ளது.அதே சமயம் குப்பைகளுக்கு நடுவிலும், நாற்றங்களுக்கு இடையிலும் வேலை செய்ய கற்றுக்கொள்ளவேண்டும். இன்றைய சூழலில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்க முடியாதது. அதை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவது மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க முடிகிறது.

தினமும் சராசரியாக 500கிலோ பவுடர் உற்பத்தி செய்கிறோம். முதலில் வீடுகளில் இருந்து குப்பைகளை பெற்று அதனை மறுசுழற்சி செய்தோம். தற்போது சில காரணங்களால் நேரடியாக குப்பை கிடங்கில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகளை பெற்று வருகிறோம். இது போன்று சொந்தமாக தொழில் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து வங்கி கடன் பெற்று மேலும் பெரிய அளவில் இந்த தொழிலை செய்வேன்.தொழில் எதுவாக இருந்தாலும் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும், கடின உழைப்பும் இருந்தால் போதும் வெற்றி பெறுவது எளிது.இன்றைய பெண்கள் ஏதேனும் சிறு தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சாதாரண குப்பையை கண்டாலே முகம் சுளிப்பவர்களுக்கு மத்தியில், குப்பை கிடங்குக்கே சென்று பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அதை லாபகரமான தொழிலாக மாற்றி காட்டும் பனிமலர் குழு பெண் சமூக வளர்ச்சிக்கு ஒரு துளி வித்து. குப்பைகளுக்கு நடுவிலும், நாற்றங்களுக்கு இடையிலும் வேலை செய்ய கற்றுக்கொள்ளவேண்டும். இன்றைய சூழலில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்க முடியாதது. அதை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவது மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க முடிகிறது.