Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சியில் எஸ்.எம்.எஸ். மூலம் கட்டட வரைபட அனுமதி

Print PDF
தின மணி           22.02.2013

கோவை மாநகராட்சியில் எஸ்.எம்.எஸ். மூலம் கட்டட வரைபட அனுமதி

நாட்டிலேயே முதன்முறையாக கோவை மாநகராட்சியில் எஸ்.எம்.எஸ். மூலம் கட்டட வரைபட அனுமதி வழங்கும் புதிய திட்டத்தை, மாநகராட்சி மேயர் செ.ம. வேலுசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவில் கட்டட அனுமதி வழங்கும் முறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாநகராட்சியின் அங்கீகரிக்கப்பட்ட கட்டட பட வரைவாளர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான ஒரிஜினல் விண்ணப்பங்களை நகரமைப்புப் பிரிவில் வழங்க வேண்டும்.

விண்ணப்பித்த 8 மணி நேரத்துக்குள் கட்டட வரைபடம் சரியாக உள்ளதா, அதில் ஏதேனும் மாற்றங்கள் தேவையா எனும் தகவல்களுடன், செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்த விவரங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.

அதன்படி கட்டட வரைபடம் தயாரித்து 15 நாள்களுக்குள் வங்கியில் உரிய கட்டணங்களை செலுத்தி, மாநகராட்சி அலுவலகத்தில் இதற்காகத் தனியாக அமைக்கப்பட்ட தகவல் வழங்கும் அறையில் உள்ள பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். 15 நாள்களுக்குள் திருத்தப்பட்ட வரைபடத்தை மாநகராட்சியில் செலுத்தாவிட்டால் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் பெறப்பட்ட நாளில் இருந்து 3 நாள்களுக்குள் கட்டட அனுமதி வழங்கப்படும். விண்ணப்பம் பெறப்பட்ட நாள், ஆணையாளர் உத்தரவு வழங்கப்பட்ட விவரம், பதிவுத் தபாலில் அனுப்பப்பட்ட கடித விவரம் ஆகியவை அந்தந்த நிலையில் கட்டட உரிமையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படும். இந்த முறை வியாழக்கிழமை முதல் கோவை மாநகராட்சியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தை மேயர் செ.ம. வேலுசாமி தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் (பொ.) சு.சிவராசு, துணை மேயர் லீலாவதி உண்ணி, செயற்பொறியாளர் (திட்டம்) ஆ.வரதராஜன், மண்டலத் தலைவர் ஜெயராமன், கல்விக் குழுத் தலைவர் சாந்தாமணி, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் பிரபாகரன், பணிகள் குழுத் தலைவர் அம்மன் அர்ச்சுனன், மாமன்ற உறுப்பினர்கள் மாரப்பன், சரஸ்வதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Last Updated on Friday, 22 February 2013 11:55