Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்ட்ரல் மார்க்கெட் இடமாற்றம் மாட்டுத்தாவணியில் கட்டுமானப் பணிகள் டிசம்பரில் முடிவடையும்: மேயர்

Print PDF

தினமணி 10.009.2009

சென்ட்ரல் மார்க்கெட் இடமாற்றம் மாட்டுத்தாவணியில் கட்டுமானப் பணிகள் டிசம்பரில் முடிவடையும்: மேயர்

மதுரை, செப். 9: மதுரை மாட்டுத்தாவணி பகுதிக்கு சென்ட்ரல் மார்க்கெட் இடம்பெயர்வதற்குத் தேவையான கட்டுமானப் பணிகள் டிசம்பரில் முடிவடையும் என்று மாநகராட்சி மேயர் ஜி. தேன்மொழி தெரிவித்தார்.

நகரின் மையப் பகுதியான அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் அருகே செயல்பட்டுவரும் சென்ட்ரல் மார்க்கெட், தமிழ்ப் புத்தாண்டில் மாட்டுத்தாவணி பகுதிக்கு மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பஸ் நிலையம், மாட்டுத்தாவணி பகுதியில் சென்ட்ரல் மார்க்கெட் அமைக்கும் பணிகள் மற்றும் அங்குள்ள லாரி நிறுத்துமிடத்தை மேயர், துணை மேயர் பி.எம்.மன்னன் ஆகியோர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

லாரி நிறுத்துமிடத்தில் ஓட்டுநர் மற்றும் கிளீனர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதை மேயர் ஆய்வு செய்தார்.

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாநகராட்சி மூலம் வழங்கியுள்ள அளவுகளை மீறி கடைகளை மாற்றியமைத்திருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தார்.

மாட்டுத்தாவணி பகுதியில் சென்ட்ரல் மார்க்கெட் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு, உரிய காலத்துக்குள் பணிகளை முடிக்குமாறு ஒப்பந்தக்காரரிடம் கேட்டுக்கொண்டார்.

பின்னர் மேயர் கூறியதாவது:

மாட்டுத்தாவணி பகுதியில் சென்ட்ரல் மார்க்கெட் அமைக்கும் பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, தமிழ்ப் புத்தாண்டில் நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய காய்கறி அங்காடி இங்கு மாற்றப்படும்.

நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மாட்டுத்தாவணி, கோச்சடை, அவனியாபுரம் பகுதிகளில் லாரிகள் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விடங்களில் கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தேவைப்படும்பட்சத்தில் மேலும் வசதிகள் செய்துகொடுக்கப்படும்.

லாரி உரிமையாளர்கள் இந்த நிறுத்தங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும். நகருக்குள் நிறுத்தப்படும் லாரிகள் மீது காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, மாநகராட்சி லாரி நிறுத்துமிடங்களில் லாரிகள் நிறுத்தப்பட ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றார் மேயர்.

Last Updated on Wednesday, 21 October 2009 06:21