Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வளர்ச்சி பணிக்கு மாநகராட்சிக்கு நிதி கொடுத்தும் பலனில்லை

Print PDF
தின மலர்                26.02.2013

வளர்ச்சி பணிக்கு மாநகராட்சிக்கு நிதி கொடுத்தும் பலனில்லை

தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ. 25 லட்சம் வழங்கியும், திட்டப்பணியை துவக்காமல் இழுத்தடிக்கும் மாநகராட்சி நிர்வாகம் மீது எம்.பி., நடராஜன், பொதுமக்களுடன் வந்து கலெக்டரிடம் புகார் தெரிவித்தார். பணியை 15 நாட்களில் துவக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, பகிரங்கமாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.கோவை உக்கடம் வாளாங்குளம் அருகே, வின்சென்ட் ரோடு பகுதி உள்ளது. இங்கு 140 குடும்பங்கள், குளக்கரையை ஒட்டி வசித்து வருகின்றன; இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.

இங்குள்ள குடியிருப்புகளில், அடிக்கடி பாம்புகள் படையெடுத்து வருகின்றன. இது பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மழைக்காலங்களிலும், வறட்சி காலங்களிலும் விஷ ஜந்துக்கள் தொல்லையால் அவதிப்பட்டு வந்த மக்கள், குளக்கரையில் குடியிருப்பு பகுதியை ஒட்டி, தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.ஆனால், இந்த கோரிக்கைக்கு, நீண்ட காலமாக மாநகராட்சி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. போதிய நிதி இல்லை என்ற காரணத்தை கூறி, பொதுமக்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனினும், மாநகராட்சி அதிகாரிகள், கலெக்டர், எம்.எல்.ஏ., எம்.பி., என, பலரையும் சந்தித்து, பொதுமக்கள் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, கோவை எம்.பி., நடராஜன், "தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் தருகிறேன்; மீதித் தொகையை மாநகராட்சி ஏற்றுக்கொண்டு, தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும்' என, பரிந்துரைத்தார். அதன்படி, ரூ. 16 லட்சம் கூடுதல் நிதியுடன் மொத்தம் ரூ. 41 லட்சம் செலவில், தடுப்புச்சுவர் கட்டித்தர மாநகராட்சி நிர்வாகம் ஒப்புக் கொண்டது. எம்.பி., நடராஜன் தனது தொகுதி வளர்ச்சி நிதியாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வழியாக,ரூ. 25 லட்சம் வழங்கியும், மாநகராட்சி பணியை துவக்கவில்லை. வெவ்வேறு காரணங்களை கூறி, பணியை துவக்காமல் இழுத்தடித்து வந்தது.

மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை விசாரித்தும், பொறுப்பான பதில் கிடைக்காததால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், மீண்டும் எம்.பி.,யிடம் முறையிட்டனர். எம்.பி.,யிடமும், மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பான பதிலை தரவில்லை. நிதி அளித்தும் பணியை துவக்காமல், மெத்தனம் காட்டிய மாநகராட்சியை கண்டித்து, வின்சென்ட் நகர் பொதுமக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ., அமைப்பு நிர்வாகிகளுடன் நேற்று கலெக்டர் கருணாகரனை சந்தித்து எம்.பி., நேரில் புகார் அளித்தார்.கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த எம்.பி., நடராஜன், "விரைவில் பணியை துவக்காவிட்டால், பொதுமக்களை திரட்டி மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவேன்' என, எச்சரிக்கை விடுத்தார்.

கலெக்டரை சந்தித்த பின், எம்.பி., நடராஜன் கூறியதாவது:

கோவை மாநகராட்சி 82வது வார்டு, வின்சென்ட் ரோடு பகுதியில் விஷ ஜந்துக்கள் தொல்லையால் மக்கள் பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர். குளத்தை ஒட்டி தடுப்புச்சுவர் கட்ட லோக்சாபா தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ. 25 லட்சம் வழங்கி, ஆறு மாதங்களாகிவிட்டன. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் இன்னும் பணியை துவக்காமல், மிகவும் மெத்தனமாக உள்ளது. பல முறை வலியுறுத்தியும், பணியை இன்னும் துவங்கவே இல்லை.பொதுமக்கள் போராட்ட நடவடிக்கையில் இறங்குவதாக தெரிவித்துள்ளனர். இதனால், கலெக்டரை சந்தித்து, மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக புகார் தெரிவித்துள்ளேன். புதிய கமிஷனர் பொறுப்பேற்பது வரை, மாநகராட்சி கால அவகாசம் கோரியுள்ளது. அதிகபட்சமாக, 10 முதல் 15 நாட்கள் கால அவகாசம் தருகிறோம். அதற்கு மேல், பணியை துவக்காமல் இழுத்தடித்தால், மாநகராட்சி அலுவலகம் முன், பொதுமக்களுடன் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்.இவ்வாறு, எம்.பி., நடராஜன் தெரிவித்தார்.

Last Updated on Tuesday, 26 February 2013 11:27