Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

'நகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு, நிதி ஒதுக்கியவர் முதல்வர்'

Print PDF
தினமணி           01.03.2013

'நகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு, நிதி ஒதுக்கியவர் முதல்வர்'


காங்கயம் நகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கியவர் முதல்வர் ஜெயலலிதா என நகர்மன்றத் தலைவர் ஜி.மணிமாறன் கூறினார்.

முதல்வர் ஜெயலலிதாவின் 65-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காங்கயத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வி முருகேசன் தலைமை வகித்தார். 8-ஆவது வார்டு கழகச் செயலர் ஆர்.சசிகுமார் வரவேற்றார்.

விழாவில் கலந்துகொண்டு நகர்மன்றத் தலைவர் ஜி.மணிமாறன் பேசியது:

காங்கயம் நகராட்சியின் வளர்ச்சிக்காக 2 ஆண்டுகளில் ரூ.5 கோடி நிதியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். சென்ற நிதி ஆண்டில் மட்டும் புதிய சாலைகள் அமைக்கவும், மின் மயானம் அமைக்கவும், நவீன ஆடுவதைக் கூடம் கட்டுவதற்காகவும், குப்பைகளை அகற்றுவதற்காக ஹைட்ராலிக் லாரிகள் மற்றும் நவீன குப்பைத் தொட்டிகள் வாங்கவும், குடிநீர், ஆழ்குழாய், தொட்டிகள் அமைக்கவும் ரூ.3 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கியிருந்தார். இப்பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளன.

நடப்பு நிதி ஆண்டில் சாலை மேம்பாடு, சாக்கடை கால்வாய்கள் அமைத்தல், ஜேசிபி வண்டி மற்றும் குப்பைத் தொட்டிகள் வாங்குவதற்காகவும், குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் ரூ.2 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

காங்கயம் பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் திட்டத்துக்கு, சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் நகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.50 லட்சம் ஒதுக்க வேண்டும் என்றார்.

காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ், தலைமைக் கழகப் பேச்சாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.வி.மார்க்கண்டேயன், ஜெயலலிதா பேரவைச் செயலர் என்.எம்.எஸ்.பழனிசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் சி.கந்தசாமி, உறுப்பினர்கள் ஏ.பி.துரைசாமி, சரஸ்வதி, பா.கோமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Last Updated on Friday, 01 March 2013 09:57