Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்

Print PDF
தினமணி         11.03.2013

இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்


சென்னை மாநகராட்சியின் இந்த நிதியாண்டுக்கான (2013-14) பட்ஜெட் திங்கள்கிழமை (மார்ச் 11) தாக்கல் செய்யப்படுகிறது.

மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தில் நிதிநிலைக் குழுத் தலைவர் சந்தானம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். இதில் புதிய திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி ரூ.3 ஆயிரத்து 500 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு வரை 155 வார்டுகளை உள்ளடக்கிய சென்னை மாநகராட்சிப் பகுதி, அதன் பிறகு 200 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் ரூ.2 ஆயிரத்து 921 கோடிக்கு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சாலை மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்புக்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கல்வி, சுகாதாரம், மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளைக் கருத்தில் கொண்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொத்து வரி சீராய்வு: பழைய சென்னை மாநகராட்சி பகுதிகளில் விதிக்கப்படும் சொத்துவரியை விட விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு 2 மடங்கு அதிகமாக விதிக்கப்படுகிறது. மாநகராட்சி முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்புகளுக்கான சீராய்வு அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொசுத் தொல்லை, போக்குவரத்து நெரிசல், கிடப்பில் போடப்பட்ட பழைய திட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கிடப்பில் உள்ள திட்டங்கள்: கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் இதுவரை நிறைவேற்றப்படாமலே உள்ளன. வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டிலாவது விரைவில் செயல்படுத்தக் கூடிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று மாமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். மாநகராட்சி முழுவதும் உள்ள குப்பை, மழைநீர் கால்வாய், குடிநீர் தட்டுப்பாடு, சுகாதார சீர்கேடு பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்குத் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தில் துணை மேயர், மாநகராட்சி ஆணையர், நிதித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.