Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி மாநகராட்சியில் ரூ. 18 கோடி பற்றாக்குறை பட்ஜெட்

Print PDF
தினமணி         12.03.2013

திருச்சி மாநகராட்சியில் ரூ. 18 கோடி பற்றாக்குறை பட்ஜெட்


திருச்சி மாநகராட்சியில் 2013-14-ம் ஆண்டுக்கான ரூ. 18.36 கோடி பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

திருச்சி மாநகராட்சி மாமன்றத்தின் அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மேயர் அ. ஜெயா தலைமை வகித்தார். ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் ம. ஆசிக் மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 2013-14-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதிக் குழுத் தலைவர் வி. அய்யப்பன் வாசித்தார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள்:

2013-14-ல் உத்தேசிக்கப்படும் மொத்த வரவு- ரூ. 260.38 கோடி, செலவு -

ரூ. 278.74 கோடி. பற்றாக்குறை- ரூ. 18.36 கோடி. இந்தப் பற்றாக்குறை நிலுவையிலுள்ள வரி வருவாய் மூலம் ஈடுகட்டப்படும்.

ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டம்: ரூ. 28.20 கோடியில் தனியார் நிறுவனம் மூலம் குழல் விளக்குகளுக்குப் பதிலாக "எல்இடி' மின்விளக்குகளைப் பொருத்தும் பணி. ரூ. 21.65 கோடியில் மழைநீர் வடிகால்கள், ரூ. 2.94 கோடியில் சிமென்ட் கான்கிரீட் சாலைகள், ரூ. 15.10 கோடியில் புதிய சாலைகள் அமைத்தல்.

தற்போதுள்ள அரியமங்கலம் குப்பைக் கிடங்கின் வடகிழக்கு மூலையில் குப்பைகளை சிரமமின்றிக் கொட்டுவதற்காக ரூ. 8.02 கோடியில் காலியிடம் ஏற்படுத்தும் பணி.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலைச் சுற்றி மதில் சுவர் உள்ள பகுதிகள் மற்றும் மாநகரின் விடுபட்ட பகுதிகளில் ரூ. 50 கோடியில் புதை சாக்கடைத் திட்டம்.

மொத்தத்தில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 129.21 கோடியில் பணிகள் மேற்கொள்ள அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதிய குடிநீர் திட்டம்: திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான 61 முதல் 65 வரையுள்ள வார்டுகளுக்கு நபருக்கு நாளொன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில், ரூ. 31.50 கோடியில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம்.

மேலும், மாநகர் முழுவதும் தேவைக்கேற்க மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக  ரூ. 80 லட்சத்தில் குடிநீர் விநியோக வாகனங்கள் வாங்கப்படும்.

"தீம் பார்க்': பஞ்சப்பூரில் 15 ஏக்கரில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தண்ணீர் விளையாட்டுப் பூங்கா அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அறிவியல் பூங்கா: ரூ. 3 கோடியில் தென்னூர் அண்ணா நகரில் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 2.65 ஏக்கரில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அறிவியல் பூங்கா.

மேலும், திருச்சி மாநகரிலுள்ள பழைய பூங்காக்களில் மரம் வளர்க்கவும், புல்தரைகள் அமைக்கவும் ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு.

பொதுக் கழிப்பறைகள்... பொதுக் கழிப்பறைகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர்த் தொட்டிகளில் கழிவுநீரை உறிஞ்சுவதற்கு ரூ. 25 லட்சத்தில் வாகனம்.

திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிக்க, 7 இடங்களில் ரூ. 75 லட்சத்தில் புதிய கழிப்பறைகள். மேலும், 32 இடங்களில் உள்ள பழைய கழிப்பறைகளை மேம்படுத்த ரூ. 50 லட்சம்.