Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.3,630 கோடிக்கு சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

Print PDF
தினமணி         12.03.2013

ரூ.3,630 கோடிக்கு சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்


இந்த நிதியாண்டுக்கான (2013-14) சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

ரூ. 3 ஆயிரத்து 630 கோடிக்குத் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், சாலை மேம்பாடு உள்பட மாநகராட்சி வளர்ச்சிக்கான 126 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் புதிய திட்டங்களை மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.

இந்த நிதியாண்டின் மொத்த வரவு ரூ. 3 ஆயிரத்து 629.40 கோடியாகவும், செலவு ரூ.3 ஆயிரத்து 630.50 கோடியாகவும், பற்றாக்குறை ரூ.1.10 கோடியாகவும் இருக்கும் என்று நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்து 922 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.708 கோடி அதிக செலவினங்களுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்வி, பொது சுகாதாரம், குடும்ப நலம், சாலைகள், பாலங்கள், வருவாய், திடக்கழிவு மேலாண்மை, கட்டடம், மின்சாரம், இயந்திரப் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் புதிய திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

சொத்து வரி, தொழில் வரி உள்பட புதிய வரிவிதிப்புகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

வார்டு அலுவலகங்களில் சொத்து வரி: மாநகராட்சி சொத்துவரி தற்போது மண்டல அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் வசூலிக்கப்பட்டு வருகிறது. சொத்து வரி செலுத்தும் முறையை எளிமையாக்க வார்டு அலுவலகங்களில் வரி செலுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 200 வார்டு அலுவலகங்களில் கணினி வசதியுடன்கூடிய சொத்துவரி வசூல் மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ஜெனரேட்டர்: மாநகராட்சிப் பள்ளிகளில் மின்தடை காரணமாக கணினி வகுப்புகள், ஆய்வகங்கள், அலுவலகப் பணிகள் தடைபடாமலிருக்க சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஜெனரேட்டர் நிறுவப்பட உள்ளது.

சென்னையில் தற்போது 99 தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடையே அதற்கு கிடைத்த வரவேற்பைக் கருத்தில் கொண்டு மேலும் 20 தொடக்க பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறையில் ஒன்றாம் வகுப்பு தொடங்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொசுவை ஒழிக்க நொச்சி செடி வளர்ப்பு: கொசு மற்றும் பூச்சிகளைக் குறைக்கும் வகையில் வீடுகள்தோறும் நொச்சி செடி வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நொச்சி செடியில் உள்ள ரசாயன மூலப்பொருள்கள் மூலம் கொசு உள்பட தீங்கு விளைவிக்கும் அனைத்து புழு பூச்சிகளை ஒழிக்க முடியும் எனவும் இதற்காக வீடுகள் மற்றும் நீர்நிலை ஓரங்களில் அந்தச் செடியை வளர்ப்பதற்கான ஏற்பாட்டை மாநகராட்சி மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தா, ஆயுர்வேத மருந்தகங்கள்: இந்திய மருத்துவ முறைகளான சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்தகங்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் தொடங்கப்பட உள்ளன. ஏழை மக்கள் பயன் பெற வேண்டி 11 சித்தா மருந்தகங்கள், 14 ஆயுர்வேத மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ளதாக திட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக்கப்பட்ட பகுதிகளில் நல்வாழ்வு மையங்கள்:  சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் 10 நல்வாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளன. மக்கள்தொகை அடிப்படையில் தேவையான இடங்களில் இந்த நல்வாழ்வு மையங்கள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரம் செயல்படும் மருத்துவமனைகளில் நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கருவிகளின் பாதுகாப்பு கருதி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 பூங்காக்கள்: மாநகராட்சி பகுதியில் உள்ள திறந்த வெளிநிலங்களில 100 பூங்காக்கள் புதிதாக அமைக்கப்படும். ஏற்கெனவே உள்ள பூங்காக்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

நூற்றாண்டு நிறைவு விழா அரங்கம்: சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டடத்தின் நூற்றாண்டு விழா (1913-2013) நிறைவைக் குறிக்கும் வகையில் புதிய பல்நோக்கு அரங்கம் கட்டப்படும்.

பள்ளிகளில் ஆங்கில ஆய்வகங்கள்: மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் வகையில் 15 நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆய்வகங்களில் ஆங்கில உச்சரிப்பு, பேச்சு, எழுதும் திறன் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். அதே போல போதிய இடவசதி உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்கப்படும்.

மழலையர் பள்ளிகளில் வண்ண சீருடை: சென்னை மழலையர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் வழங்கப்படுவதைப் போல வண்ண சீருடைகளும், குழந்தைகளைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட காலணிகளும் வழங்கப்படும். மக்களின் வரவேற்பையும், தேவையையும் கருத்தில் கொண்டு மாநகராட்சி பகுதியில் மேலும் 10 புதிய மழலையர் பள்ளிகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாய்கள் சரணாலயம்: தெருக்களில் நோய்களுடன் திரியும் நாய்களைப் பராமரிப்பதற்காக மண்டலம் தோறும் நாய்கள் சரணாலயம் அமைக்கப்படும். பொதுமக்களுக்கு தொல்லையளிக்கும் தெரு நாய்களை பிடித்து தடுப்பூசி போடப்படும். மேலும் நாய்களுக்கு இனக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து சரணாலயத்தில் பராமரிக்கப்படும்.

செல்லப் பிராணிகள் மயானம்: வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் இறந்தால் அவற்றை அடக்கம் செய்வதற்காக மண்டலம் தோறும் செல்லப் பிராணிகள் மயானம் அமைக்கப்படும். இங்கு பொதுமக்கள் தங்கள் செல்லப் பிராணிகளை இலவசமாக அடக்கம் செய்து கொள்ளலாம்.

மாநகராட்சி கட்டடங்களில் சூரிய சக்தி மின்சாரம்: மாநகராட்சி கட்டடங்களில் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சி அலுவலகங்களின் அனைத்துக் கட்டடங்களிலும் சூரிய சக்தி தகடுகள் மூன்றாண்டுகளுக்குள் அமைக்கப்படும்.

எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு, செலவீனம் எவ்வளவு?

சாலைகள் மற்றும் பூங்கா ரூ. 990.49 கோடி

மழைநீர் வடிகால்வாய் ரூ. 450 கோடி

பாலங்கள்           ரூ. 31.15 கோடி

மின்சாரம்           ரூ. 66 கோடி

திடக்கழிவு மேலாண்மை ரூ. 58.70 கோடி

இயந்திரப் பொறியியல் ரூ. 14.10 கோடி

கட்டடம்             ரூ. 74 கோடி

கல்வி                  ரூ.14.50 கோடி

சுகாதாரம்           ரூ.   3.08 கோடி

குடும்ப நலம்        ரூ.   3.30 கோடி