Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

Print PDF

தினகரன்           12.03.2013

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு


திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் 15 ஏக்கர் பரப்பளவில் வாட்டர் தீம் பார்க் அமைக்க உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2013-14ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களின் விபரம்:

திருச்சி மாநகராட்சி பகுதியில் 36,190 தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மின்சேமிப்பு நடவடிக்கையாக இவற்றில் எல்இடி மின் விளக்குகளை பொருத்துவது, தெருவிளக்குகளை சீரமைப்பது போன்ற பணிகளுக்கு ரூ.28.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை சுற்றியுள்ள மதிற்சுவர் பகுதிகள் மற்றும் மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளில் ரூ.50 கோடி செலவில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தரப்பட உள்ளது. சிங்காரத்தோப்பு யானைக்குளம் பகுதியில் 4 அடுக்கு மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்ட உள்ளூர் திட்ட குழுமம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தென்னூர் அண்ணாநகரில் 2.65 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி செலவில் வண்ண பூக்கள், நீரூற்றுகள், விளையாட்டு உபகரணங்கள், இருப்பு ஊர்தி, கேண்டீன் போன்றவற்றுடன் கூடிய அறிவியல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியை அரசின் நிதியுதவி மூலம் பெற்று மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான பொது கழிப்பிடங்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் நச்சுத்தொட்டிகளை சுத்தம் செய்ய ரூ.25 லட்சம் மதிப்பில் ஒரு நவீன கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் வாங்கப்பட உள்ளது.

திருச்சி மாநகரை திறந்தவெளியில் மனிதக்கழிவு இல்லாத மாநகரமாக மாற்ற ரூ.75 லட்சம் செலவில் 7 இடங்களில் புதிய கழிப்பறை கட்டவும், ரூ.1.25 கோடி மதிப்பில் 32 கழிப்பறைகளை மேம்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. புத்தூரில் குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகே மீன் மார்க்கெட் அமைந்துள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறும், சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த மீன் மார்க்கெட்டினை குழுமணி ரோட்டிலுள்ள காசி விளங்கி பாலம் அருகே நவீன வசதிகளுடன் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை பகுதியிலுள்ள சுடுகாட்டில் இறந்தவர்கள் உடல்கள் பழைய முறையில் எரியூட்டப்பட்டு வருகின்றது. அங்கு நவீன வசதியுடன் கூடிய எரிவாயு தகன மேடை ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

மாநகரில் 60 சாலைகளில் அவற்றின் பெயரை சுட்டிக் காட்டும் வகையில் துருபிடிக்காத கட்டமைப்பினால் ஆன பலகை அமைக்கப்பட உள்ளது. ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டிலுள்ள விடுபட்ட மொத்த வியாபாரிகளுக்கு, பழைய பேருந்து நிலையத்தின் வடபுறம் நிரந்தர கடைகள் கட்டித்தரப்படும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அங்கு தகுதியான இடத்தை தேர்வு செய்து புதிய பஸ் நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. உறையூர், மேலரண் சாலையில் செயல்படும் தாய் சேய் நல விடுதிகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதனை தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக ரத்த பரிசோதனைக்கூடம், மகப்பேறு அறுவை சிகிச்சை கூடம், ஸ்கேன் வசதி ஆகியவற்றுடன் 24 மணி நேரமும் செயல்படும் வகையிலான மருத்துவமனையை அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காந்தி மார்க்கெட்டில் இயங்கி வரும் வாழைக்காய் மண்டி, வெல்லமண்டி, வெங்காயமண்டி மொத்த வியாபார கடைகளை மட்டும் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காந்தி மார்க்கெட்டில் உருவாகும் திடக்கழிவுகள், மக்கும் தன்மையுள்ள காய்கறி, மீன், இறைச்சி மற்றும் உணவு போன்ற கழிவுகளில் இருந்த பரிச்சார்த்த முறையில் தினசரி 5 மெட்ரிக் டன் கழிவுகளில் இருந்து பயோ-டைஜெஸ்டர் திட்டம் மூலம் மின்சக்தி உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பஞ்சப்பூரில் 15 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தண்ணீர் விளையாட்டு பூங்கா (வாட்டர் தீம் பார்க்) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் மாநகராட்சியில் தற்போதுள்ள 82 பூங்காக்களை புதுப்பித்து பராமரிக்கவும், புதிய பூங்காங்களை உருவாக்கவும் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காந்தி மார்க்கெட் எதிரிலுள்ள டைமண்ட் ஜூப்ளி வளாகத்தில் இருக்கும் கட்டண கழிப்பிடம், வாகன நிறுத்துமிடம், கடைகளை இடித்து விட்டு, புதிதாக நவீன கட்டண கழிப்பிடம், 2 மாடிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது.

மாநகராட்சியில் உள்ள ஆவணங்கள், பிறப்பு இறப்பு பதிவேடு, நிர்வாக வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் போன்றவற்றை கணினியில் பதிவு செய்து, தேவைப்படும் நேரத்தில் உரிய விபரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் ரூ.50 லட்சம் செலவில் மின்னணு ஆளுமை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மாநகராட்சி மைய அலுவலகம், கோட்ட அலுவலகம், வரி வசூல் மையங்கள், குப்பை கிடங்கு ஆகிய இடங்களில் நிர்வாக ரீதியாகவும், பாதுகாப்பு கருதியும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது.

5 புதிய வார்டுகளில் குடிநீர் அபிவிருத்தி

60 வார்டுகளுடன் செயல்பட்டு வந்த திருச்சி மாநகராட்சியுடன் கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக எல்லக்குடி, பாப்பாக்குறிச்சி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகள் இணைக்கப்பட்டன. இதன்மூலம் மாநகராட்சி வார்டுககிளின் எண்ணிக்கை 65 ஆக உயர்த்தப்பட்டது. இதில், பாப்பாக்குறிச்சி பகுதியில் ஒரு நவீன ஆட்டிறைச்சி கூடமும், பாப்பாக்குறிச்சி பிரதான சாலையில் தற்போது தற்காலிகமாக இயங்கி வரும் தினசரி சந்தைக்கு (தரைக்கடை) நிரந்தரமாக கட்டிடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. 61-65 வார்டுகளில் தற்போது ஒரு நாளைக்கு, ஒரு நபருக்கு 80 லிட்டர் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனை 135 லிட்டராக உயர்த்த ரூ.31.5 கோடி செலவில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குடிநீர் சப்ளைக்காக ரூ.80 லட்சம் செலவில் லாரிகளும் வாங்கப்பட உள்ளன.