Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் குறைகள் தீர்க்க சிறப்பு திட்டம் அறிமுகம் ரூ50 கோடியில் மேம்பாலங்கள் வண்டியூர் கண்மாயில் படகு சவாரி ரூ8 கோடியில் சுரங்க நடைபாதைகள்

Print PDF
தினகரன்         12.03.2013

மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் குறைகள் தீர்க்க சிறப்பு திட்டம் அறிமுகம் ரூ50 கோடியில் மேம்பாலங்கள் வண்டியூர் கண்மாயில் படகு சவாரி ரூ8 கோடியில் சுரங்க நடைபாதைகள்


மதுரை, : மாநகராட்சி பட்ஜட்டில் 100 வார்டிலும் குறைகளை தீர்க்க சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வண்டியூர் கண்மாயின் மத்தியில் தீவு அமைத்து படகு சவாரி, ரூ.50கோடியில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சியின் 2013-14ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மேயர் ராஜன் செல்லப்பா தாக்கல் செய்தார்.

அதிலுள்ள முக்கிய அம்சங்கள் மதுரை மாநகராட்சியில் 1500 புதிய ஊழியர் நியமனம் செய்து கொள்ள முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையம், ஆவின் நிறுவனம், மேலூர் சாலை, தெற்குவெளி வீதி, அண்ணா நகர், பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.50கோடியில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும். முதற்கட்டமாக 2மேம்பாலங்கள் கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது.

கோரிப்பாளையம், செயின்ட்மேரீஸ் பள்ளி சந்திப்பு, பெரியார் பஸ்ஸ்டாண்ட் மற்றும் வடக்குவெளி வீதி ஆகிய பகுதிகளில் ரூ.8 கோடியில் சுரங்க நடைபாதைகள் அமைக்கப்படும். ரிங்ரோட்டின் இருபுறமும் தடுப்பு சுவர் எழுப்பி 6 வழிச்சாலையாக்கப்படும்.

வண்டியூர் கண்மாயை அழகுபடுத்தி பறவைகள் சரணாலயம், பொழுது போக்கு பூங்கா அமைக்கவும், கண்மாயின் மத்தியில் தீவு ஏற்படுத்தி படகு சவாரியை மீண்டும் துவங்க ரூ.60 கோடியில் திட்டம் தயாரித்து அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அம்மா திட்டம் என்ற பெயரில் சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. அழகிய, தூய்மையான, சுகாதாரமான மாநகரமாக்கும் நோக்குடன் இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி 100 வார்டுகளிலும் அனைத்து குறைகளும் உடனடியாக தீர்க்கப்படும். இதற்காக மண்டலத்திற்கு 150 பேர் வீதம் 600 பணியாளர்கள் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு மண்டலத்திலும் 15 பேர் கொண்ட 10குழுக்கள் ஏற்படுத்தப்படும். இதுதவிர குடிநீர் மற்றும் கழிவு நீர் கசிவை கண்காணித்து சீரமைக்க நடமாடும் தனிக்குழு செயல்படும். இந்த திட்டத்திற்காக வார்டுக்கு ரூ.2லட்சம் வீதம் 100 வார்டுக்கு மாதம் ரூ.2 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கவுன்சிலர் வார்டு மேம்பாட்டுக்கான ரூ.5லட்சம் நிதி ரூ.10லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள மாநகராட்சி இடம் தொழில் முனைவோர் பூங்காவாக்கப்படும். வண்டியூர் கண்மாய் சார்ந்த பகுதியை சுற்றுலா மற்றும் மருத்துவ சுற்றுலா மையமாகவும் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

குடிநீர் பிரச்னை தீர்க்க அறிவிப்பு இல்லை

மேயர் ராஜன்செல்லப்பா பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கியதும், திமுக கவுன்சிலர்கள் எழுந்து, பட்ஜெட் விவரங்கள் மரபுபடி முன்கூட்டியே கவுன்சிலர்களுக்கு தரப்படவில்லை, என்றனர்.

உடனே மேயர், அப்படி மரபு இல்லை. பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பேச வாய்ப்பு தருகிறேன், அப்போது பேசுங்கள். மீறினால் நிரந்தரமாக வெளியேற்றும் நிலை ஏற்படும், என்றார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இதன் பிறகு திமுக எதிர்க்கட்சி தலைவர் எம்.எல்.ராஜ், முபாரக்மந்திரி, மாணிக்கம் கூறியதாவது: கடந்த ஆண்டு மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எந்த திட்டமும் நிறைவேறாமல் கானல் நீராகி விட்டது. அதையே மாற்றி இந்த பட்ஜெட்டில் மேம்பாலம், சுரங்கப்பாதை வருகிறது, வண்டியூர் கண்மாயை அழகுபடுத்தி படகு சவாரி என்று மீண்டும் அறிவித்து வெறும் கையில் மேயர் முழம் போடுகிறார். இந்த பட்ஜெட்டிலும் மக்களுக்கு பயன் தரக்கூடியது எதுவும் இல்லை.

மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் மக்கள் அடிப்படை தேவை நிறைவேறாமல் வேதனை அடைந்து வருகின்றனர். முக்கியமாக நகர் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்கி உள்ளது. அதை தீர்க்க பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் எப்போது குடிநீர் கிடைக்கும் என்றும் சொல்ல வில்லை. மாநகராட்சி அன்றாடம் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கு மேயர் புதிய பெயர் சூட்டி இருக்கிறார். மொத்தத்தில் கானல் நீர் பட்ஜெட். இவ்வாறு அவர்கள் கூறினர்.