Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"மாநிலங்கள் ஒத்துழைத்தால்தான் குடிசைகள் இல்லாத இந்தியா உருவாகும்': அமைச்சர் செல்ஜா

Print PDF

தினமணி 13.09.2009

"மாநிலங்கள் ஒத்துழைத்தால்தான் குடிசைகள் இல்லாத இந்தியா உருவாகும்': அமைச்சர் செல்ஜா

புது தில்லி, செப். 12: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை குடிசைகள் இல்லாத நாடாக மாற்ற மாநிலங்களின் முழுமையான பங்களிப்பு வேண்டும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் செல்ஜா சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் மேலும் கூறியதாவது:

நாட்டில் குடிசைப் பகுதிகள் மாற்றப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒழுங்குமுறை அமைப்புகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்.

இதுகுறித்த மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒப்புதலுக்கு வைக்கப்பட உள்ளது. மசோதாவை முடிவு செய்வதற்கு முன், பலதரப்பட்ட பங்குதாரர்களிடமும் கலந்தாலோசிக்கப்படும்.

வீட்டுவசதி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகம் ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் குடிசைவாழ் மக்களின் மறுவாழ்விற்காக, குடிசைப் பகுதிகள் இருந்த இடத்திலேயே வீடுகள் கட்டும் பணியை செய்து கொண்டிருக்கிறது.

இத்திட்டத்தின் மூலம் 10 லட்சத்து 40 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தனியார் துறையின் ஒத்துழைப்போடு அரசு செயல்படுத்தும் திட்டங்களில் பங்குபெறும் தனியார் நிறுவனங்களுக்கு உரிய கால இடைவெளியில் தேவைப்படும் நேரத்தில் நிதி அளிக்கப்படும்.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு தில்லி மாநில அரசு குடிசைவாழ் பகுதி மக்களின் மறுவாழ்விற்காக அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்டங்களில் பெரும்பாலானவற்றை செயல்படுத்த வேண்டும் என்றார்.