Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை குடிநீருக்காக ரூ.330 கோடியில் புதிய அணை அரசு நில வழிகாட்டி மதிப்பீட்டு உயர்வு நிறுத்திவைப்பு பட்ஜெட்டில் அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி                22.03.2013

சென்னை குடிநீருக்காக ரூ.330 கோடியில் புதிய அணை அரசு நில வழிகாட்டி மதிப்பீட்டு உயர்வு நிறுத்திவைப்பு பட்ஜெட்டில் அறிவிப்பு

அரசு நில வழிகாட்டி மதிப்பீட்டு உயர்வை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக ரூ.330 கோடியில் ஒரு புதிய அணை கட்டப்பட்டு வருகிறது என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்று விவரங்கள் வருமாறு:–

நில வழிகாட்டி மதிப்பீடு உயர்வு நிறுத்திவைப்பு

நில வழிகாட்டி மதிப்பீட்டு உயர்வை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை கிராமங்களின் அருகில் ரூ.330 கோடி செலவில் ஒரு புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

மேலும், சோழவரம், போரூர், நேமம், அயனம்பாக்கம் ஏரிகளின் கொள்திறனை உயர்த்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளுரோசிஸ் குறைப்பு திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

கூட்டுக்குடிநீர் திட்டம்

மதுரை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், வேலூர், சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.212.54 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஓரளவு குடிநீர் வசதி கிடைத்துள்ள 6 ஆயிரம் ஊரக குடியிருப்புகளுக்கும், குடிநீரின் தரம் பாதிக்கப்பட்டு உள்ள 195 குடியிருப்புகளுக்கும், தேசிய ஊரக குடிநீர் வழங்கல் திட்டம், அடிப்படை தேவைகள் திட்டம் மற்றும் மாநில அரசு நிதியின் கீழ் ரூ.1,190.72 கோடி செலவில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

மலைப்பகுதி ஐ.டி.ஐ. நிலையங்களுக்கு ரூ.50 கோடி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட பங்கு மூலதன உதவியாக ரூ.13.26 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் சிறப்பு உதவி மூலம், பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்திட இந்த நிறுவனத்திற்கு ரூ.122.48 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்குவதற்காக ரூ.56.34 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு சிறப்பு திட்டத்தை தொடங்கியுள்ளார். அதன்படி, நடப்பாண்டில் ஜமுனாமரத்தூர், கொல்லிமலை, ஆனைகட்டி, பச்சைமலை, கல்வராயன்மலை ஆகிய 5 இடங்களில் புதிய ஐ.டி.ஐ. நிலையங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

ரூ.1,130 கோடியில் சாலைகள் மேம்பாடு

2013–2014–ம் நிதியாண்டில் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் 8–வது கட்டத்தின் கீழ் 3095.77 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை ரூ.1,130.10 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இதில், ரூ.78.18 கோடி செலவில் 45 பாலங்களையும், ரூ.772.97 கோடி செலவில் 2031.22 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளையும் மேம்படுத்தும் பணிகளை கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளும், ரூ.278.95 கோடி செலவில் 1064.55 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத் துறையும் மேற்கொள்ளும்.

சென்னை பெருநகர் மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி

இந்த நிதியாண்டில் சென்னை பெருநகர மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.500 கோடியும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்திற்காக ரூ.750 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மறுசுழற்சி முறை, கழிவுகளை அகற்றும் வசதிகளோடு கூடிய திடக்கழிவு மேலாண்மை முறை அனைத்து கிராமங்களிலும் ஏற்படுத்தப்படும். நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராமங்கள், அந்த நகரங்களில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களில் பங்கு கொண்டு திடக்கழிவு மேலாண்மை முறையை செயல்படுத்தும்.

கழிவுகளை சேகரித்து கையாளும் செலவுகள் உள்ளிட்டு, இத்தகைய வசதிகளை ஏற்படுத்துவதற்காக நிதிப்பகிர்வுத் தொகையில் இருந்து ரூ.150 கோடி தனியாக ஒதுக்கப்படும். ‘தூய்மை பாரதம்’ திட்டத்தில் கிடைக்கக்கூடிய ரூ.97.85 கோடியும், திடக்கழிவு, கழிவுநீர் மேலாண்மை பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.