Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பட்ஜெட்டில் புது திட்டங்கள் இல்லை சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம்

Print PDF
தினமலர்        27.03.2013

மாநகராட்சி பட்ஜெட்டில் புது திட்டங்கள் இல்லை சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம்


சேலம்: சேலம் மாநகராட்சியில், 2013-14ம் ஆண்டு பட்ஜெட்டில், சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில், 2013-14ம் ஆண்டு பட்ஜெட்டில் தனிக்குடிநீர் திட்டம், பாதாளசாக்கடை திட்டம், திருமணி முத்தாறு, இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணி, திடக்கழிவு மேலாண்மை திட்டம் போன்றவை குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலான திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறாதது, பல்வேறு தரப்பினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பட்ஜெட் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

*சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, ஐந்து ரோடு சந்திப்பு, ஏ.வி.ஆர்., ரவுண்டானா, குரங்குசாவடி ஆகிய பகுதிகளில், மூன்று புதிய பாலங்கள் அமைக்கப்பட உள்ளது.

*எருமாப்பாளையம், மணியனூர், வீராணம் குப்பை மேடுகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், பயோமைனிங் முறையில் அல்லது நவீன முறையில் மூடுதளம் அமைத்து, அதன் மேல் புல் தரைகள் அமைத்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்கப்படும்.

*வ.உ.சி., மார்க்கெட்டை புதிய வடிவில், நவீனமாக்குவது.

*பழைய பஸ் ஸ்டாண்டில், நவீன முறையில் புதிய கட்டிடங்கள் கட்டுவது.

*மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் திருமணி முத்தாற்றின் கரைகளில், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம்.

*தனியார் பங்களிப்பின் உதவியோடு, புது பஸ் ஸ்டாண்ட், திருமணி முத்தாற்றின் குறுக்கே நவீன முறையில், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் அமைத்தல்.

*பொன்னம்மாப்பேட்டை ரயில்வே கிராஸிங் பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்தல்.

*பசுமைத்திட்டத்தை ஊக்குவிக்க, 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல்.

*மாநகராட்சியில், 16 ஆயிரத்து, 840 மின்சார சேமிப்பு தெருவிளக்குகள் அமைத்தல்.

*ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் போன்றவற்றறை பரிசோதனை செய்வதற்கான ஆய்வகத்தை ஏற்படுத்துவது.

*பொன்னம்மாப்பேட்டை, அரிசிப்பாளையம், அம்மாப்பேட்டை, தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, கோட்டை, குகை, பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைகளை, ஒரு கோடி ரூபாய் செலவில் புதுப்பித்தல்.

*குமாரசாமிப்பட்டி தாய் சேய் நலமையம், தாதகாப்பட்டி தாய் சேய் நல மையம் அல்லது அம்மாப்பேட்டை அண்ணா மருத்துவமனை ஆகியவற்றில் புதிதாக அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின், ஓய்வு அறைகள், இரண்டு கோடி செலவில் அமைத்தல்.

*மாநகராட்சியில் உள்ள அனைத்து பஸ் ஸ்டாப்புகளிலும், ஆண்கள், பெண்கள் பயன்படுத்தும் வகையில், நவீன முறையிலான கழிப்பிட வசதி அமைத்தல்.

*ஹைதராபாத் தேசிய மீன் வளர்ச்சி கழகத்தின் நிதியுதவியுடன் குகை பகுதியில், ஒரு கோடியே ரூபாய் மதிப்பில் நவீன மீன் அங்காடி அமைத்தல்.

*மண்டலத்துக்கு, ஒன்று வீதம், நான்கு மீன் அங்காடிகள் அமைத்தல்.

*சீலநாயக்கன்பட்டி பகுதியில், பூ மார்க்கெட் அமைத்தல்.

*அம்மாப்பேட்டை - ஆத்தூர் மார்கம் மற்றும் சீலநாயக்கன்பட்டி- நாமக்கல் மார்கம் ஆகிய எல்லைகளில் வரும் பஸ்களை, பொதுமக்கள் நலன் கருதி அந்தந்த எல்லையில் நிறுத்த புதிய பஸ் ஸ்டாண்ட் அமைத்தல்.

*நரசோதிப்பட்டி பகுதியில் உள்ள வாரச்சந்தையை, தினசரி சந்தையாக மாற்றுவது.

*மாநகராட்சி பள்ளிகளில், 10, 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாற்று திறனாளிகளுக்கு, ஊக்கத்தொகை வழங்குதல்.

*மகளிர் சுகாதாரத்தை பேணும் வகையில், மகளிர் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனைகளில், சானிட்டரி நாப்கின்ஸ்களை எரியூட்டும் நவீன இயந்திரங்கள், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட உள்ளது.

*நோய் கண்காணிப்பு, நோய் தடுப்பு மற்றும் அவசர கால பிரசவம் மற்றும் பிரசவத்துக்கு மேல் சிகிச்சைக்காக, பரிந்துரை மருத்துவ குழு மற்றும் மருத்துவர்கள் பயன்பாட்டுக்கு நடமாடும் மருத்துவ வாகனம், 40 லட்சம் ரூபாய் செலவில் வாங்குதல்.

இந்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.