Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய குடிநீர்த் திட்டம், 179 ஆழ்குழாய்க் கிணறுகள்: பட்ஜெட்டில் அறிவிப்புகள் ஏராளம்

Print PDF
தினமணி     28.03.2013

புதிய குடிநீர்த் திட்டம், 179 ஆழ்குழாய்க் கிணறுகள்:  பட்ஜெட்டில் அறிவிப்புகள் ஏராளம்


திருப்பூர் மாநகரின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். 179 ஆழ்குழாய்க் கிணறுகள், இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்திப் பணிகள் என பல்வேறு திட்டங்கள் குறித்து பட்ஜெட் உரையில் மேயர் அ.விசாலாட்சி புதன்கிழமை தெரிவித்தார்.

மேயர் அ.விசாலாட்சி பேசியது:

திருப்பூர் மாநகரின் கூடுதல் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய குடிநீர்த் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். கோடை காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் 179 மின்விசை பம்புகளுடன் கூடிய ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்படும். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகத்திற்கு கூடுதலாக குடிநீர் விநியோக குழாய்கள் பதிக்கவும், சிறிய அளவு குழாய்களை மாற்றவும் ரூ.14.40 கோடி, ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்க ரூ.13 கோடி, சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு குளோரினேசன் பிளாண்ட் அமைக்க ரூ.2 கோடி, பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரிவுபடுத்தி குழாய்கள் அமைக்க ரூ.50 லட்சம், தார்ச் சாலைகள் அமைக்க ரூ.47.30 கோடி, கான்கிரீட் சாலைகள் அமைக்க ரூ.1 கோடி, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட, ஏற்கெனவே உள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.26.05 கோடி, பிளாஸ்டிக் கழிவு சேகரிக்க கிடங்குகள் அமைக்க ரூ.27 லட்சம், தெரு நாய்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ரூ.26.17 லட்சம், கொசுக்களை ஒழிக்க புகைப்போக்கி இயந்திரங்கள் வாங்க ரூ.4 லட்சம், தெற்குப் பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்க ரூ.90 லட்சம், மீன் விற்பனை அங்காடி கூடுதலாக அமைக்க ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகமாகக் கூடும் பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் பொது சுகாதார நலன் கருதி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் டாய்லெட் திட்டம், துப்புரவுத் தொழிலாளர்களுக்காக தளவாடச் சாமான்கள் வாங்குவதற்கு ரூ.50 லட்சம், மருத்துவமனைகள், மக்கள் கூடும் இடங்களில் எலிகளை ஒழிக்க, இந்த நிதியாண்டில் ரூ.2 லட்சம், நொய்யல் ஆற்றில் ஆகாயத்தாமரைகளை அகற்ற ரூ.10 லட்சம், தூய்மைமிகு திருப்பூர் திட்டத்தின் கீழ் 75 ஏக்கரில் மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்க மற்றும் தண்ணீர் வசதி செய்ய இந்த நிதியாண்டில் ரூ.4 லட்சம், பூங்காக்கள் அமைக்க மற்றும் பராமரிக்க ரூ.3.61 கோடி, சூரிய ஒளி மின்சக்தி வசதியை ஏற்படுத்த ரூ.1.50 கோடி, மாநகராட்சி மருத்துவமனைகள் பராமரிப்புக்கு ரூ.60 லட்சம், மாநகராட்சிப் பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.2.91 கோடி, முதலாவது மண்டலத்தில் ரூ.2 கோடி செலவில் ஆடு வதைக் கூடம், தெருவிளக்குகள் அமைக்க ரூ.3 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழைய பேருந்து நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.25 லட்சம், புதிய பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.5 கோடி, பழைய பேருந்து நிலையம் எதிரில் தினசரி அங்காடி அமைக்க ரூ.13 கோடி, மலர் அங்காடியை நவீன முறையில் கட்டுவதற்கு ரூ.4.10 கோடி, ரிசர்வ் சைட்களை வேலி அமைத்துப் பாதுகாக்க ரூ.30 லட்சம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.10 கோடி, வாகனங்கள் வாங்க ரூ.2 கோடி, கூடுதலாக குப்பை சேகரிக்கும் கலன்கள் வாங்க ரூ.1 கோடி, 50 டன் கழிவைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு ரூ.90 லட்சம், நகர மண்டபத்தை மேம்படுத்த ரூ.50 லட்சம், 6 இடங்களில் உயர் நடைபாதை அமைக்க ரூ.4.03 கோடி, 2-ஆவது, 4-ஆவது மண்டல அலுவலகங்களை புதிதாகக் கட்ட ரூ.3 கோடி, மண்டல அளவில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ரூ.50 ஆயிரம் என்பதை ரூ.1 லட்சமாக உயர்த்தி, இதற்காக தலா ரூ.2 கோடி வீதம் மொத்தம் ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் தெருவிளக்குகள், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை பணிக்கு என ரூ.131 கோடி அரசு மானியம் வழங்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மண்டல அலுவலகங்களில் படிப்பகம், நிரந்தர கண்காட்சி வளாகம், மக்களைத் தேடி மாநகராட்சி செல்லும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.