Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈரோடு மாநகராட்சியில் ரூ. 161 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்: ரூ. 11.5 கோடி பற்றாக்குறை

Print PDF
தினமணி     28.03.2013

ஈரோடு மாநகராட்சியில் ரூ. 161 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்:  ரூ. 11.5 கோடி பற்றாக்குறை


ஈரோடு மாநகராட்சியில் ரூ. 160.95 கோடிக்கு பட்ஜெட்டை மேயர் ப.மல்லிகா பரமசிவம் தாக்கல் செய்தார். இதில் ரூ. 11.55 கோடி பற்றாக்குறை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2013-14ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டில் சொத்து வரி மூலம் ரூ. 17.03 கோடி வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட மாநகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூலமாகவும், அரசு ஊழியர்கள் மூலமாகவும் தொழில்வரியாக ரூ. 3.17 கோடி வருவாய் கிடைக்கும்.

மாநகராட்சிக்குச் சொந்தமான காமராஜ் சாலை வணிக வளாகக் கடைகள், பேருந்து நிலையத்தில் உள்ள புதிய, பழைய வணிக வளாகம் மற்றும் மேற்குப்புற கடைகள், விசிடிவி சாலை, ஆர்.கே.வி. சாலை, ஹெமிங்வே வணிக வளாகக் கடைகள், காவிரி சாலை வணிக வளாகக்கடைகள், லூம்வேர்ல்டு வணிக வளாகக்கடைகள், நேதாஜி வணிக வளாக கடைகள் என மொத்தம் 425 கடைகள் மூலம் ரூ. 2.64 கோடி வருவாய் கிடைக்கும்.

தினசரி சந்தைகள், வாரச்சந்தைகள், பேருந்து நிலைய நுழைவுக் கட்டணம், டிவி விளம்பரம், தங்கும் விடுதி, பொருள் பாதுகாப்பு அறை, ஆடு வதைக்கூடம் போன்ற ஓராண்டு குத்தகை இனங்கள் மூலம் ரூ. 1.92 கோடி வருவாய் கிடைக்கும்.

பட்ஜெட்டின்படி மாநகராட்சிக்கு வருவாய் நிதி மூலம் ரூ. 137.95 கோடியும், குடிநீர் நிதி மூலம் ரூ. 17.36 கோடியும், கல்வி நிதி மூலம் ரூ. 5.64 கோடியும் என மொத்தம் ரூ. 160.95 கோடி வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், வருவாய் செலவினம் மூலம் ரூ. 146.06 கோடி, குடிநீர் செலவினம் மூலம் ரூ. 21.23 கோடி, கல்வி செலவினம் மூலம் ரூ. 5.20 கோடி என மொத்தம் ரூ. 172.49 கோடி செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ. 11.55 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பற்றாக்குறையை ஈடுசெய்ய நடவடிக்கை: பட்ஜெட்டில் ஏற்பட்டுள்ள ரூ. 11.55 கோடி பற்றாக்குறையைச் சமாளிக்க கூடுதல் வருவாய் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

வருவாய் செலவினத்தில் ஏற்படும் ரூ. 8.11 கோடி பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் இதர பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் இரு சக்கர வாகன பாதுகாப்பு நிலையங்கள், நான்கு சக்கர வாகன பாதுகாப்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கு தனியாக வரி நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் செலவினத்தில் ஏற்படும் ரூ. 3.88 கோடி பற்றாக்குறையை ஈடுசெய்ய குடிநீர்க் கட்டணத்தை உயர்த்தவும், ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டம் மூலம் புதிதாக வழங்கப்படும் குடிநீர் இணைப்புகளுக்கு வைப்புத்தொகையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேயர் அறிவிப்பில் முக்கிய அம்சங்கள்

ஈரோடு மாநகராட்சி பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்:


1. மொத்த பட்ஜெட் நிதியில் 25 சதவிகிதம் குடிசை வாழ் மக்கள் பயன்பெறும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

2. புதிய வரிகள் ஏதும் இல்லை.

3. அப்துல்கனி மார்க்கெட்டில் நவீன வசதிகளுடன் கூடிய ஜவுளிச்சந்தை வளாகம் அமைக்கப்படும்.

4. மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேலும் 3 இடங்களில் கூடுதலாக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

5. ரூ. 400 கோடி மதிப்பில் ஊராட்சிக்கோட்டையில் இருந்து குடிநீர் எடுத்துவரும் திட்டம் நடப்பு ஆண்டில் தொடங்கப்படும்.

6. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பிரப் சாலையையும், சென்னிமலை சாலையையும் இணைக்கும் 80 அடி திட்டச்சாலை அமைக்க ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு.

7. மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை ஊக்கப்படும் வகையில் அரசுப் பொதுத்தேர்வுகளில் (எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2) முதல் மூன்று மதிப்பெண்களைப் பெறுவோருக்கு சிறப்புப்பரிசு வழங்கும் திட்டம் அறிமுகம்.

8. மாநகராட்சிப் பகுதியுடன் இணைந்த உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தேவை அறிந்து தரம் உயர்த்த நடவடிக்கை.

9. காந்திஜி சாலையில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்கள் பிரசவம் முடிந்து வீடு திரும்பும் வரை ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் அறிமுகம்.

10. சொத்துவரி, தொழில்வரி, குடிநீர்க் கட்டணம் ஆகியவற்றை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி நடப்பு ஆண்டில் அறிமுகம்.

11. ஈரோடு பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ஏடிஎம் வசதி அறிமுகம்.

12. மாநகராட்சியுடன் புதிதாக இணைந்த பகுதிகளில் 6 புதிய பூங்காக்கள் உருவாக்க ரூ. 60 லட்சம் ஒதுக்கீடு.

13. மாநகராட்சி அலுவலக கட்டடங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை சூரியஒளி மூலம் பெற ரூ. 2.20 கோடி ஒதுக்கீடு.

14. மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மட்கும் கழிவுகளைப் பயன்படுத்தி தினமும் 9,600 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் பயோகேஸ் மெத்தனேசன் நிலையம் அமைக்க ரூ. 90 லட்சம் ஒதுக்கீடு.

15. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சூளை பேருந்து நிறுத்தம், திண்டல் பேருந்து நிறுத்தம், ஆர்.என்.புதூர் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் ரூ. 11.50 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படும்.

16. பாதாள சாக்கடைத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பகுதிகளான சம்பத்நகர் சாலை மற்றும் இதர சாலைகளைச் சீரமைக்கும் பணி 19.51 கி.மீ. தூரத்துக்கு ரூ. 10.21 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். பிற இடங்களில் 25.24 கி.மீ. தூரத்துக்கு சாலைகளைச் சீரமைக்க ரூ. 10.47 கோடியில் கருத்துருக்கள் தயாரிக்கப்படும்.

17. பெரும்பள்ளம் ஓடையை சுத்தம் செய்து கான்கிரீட் தளம், பக்கச்சுவர், ஓரத்தில் சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

18. அரசுத் தலைமை மருத்துவமனை அருகே நெடுஞ்சாலைத் துறை மூலம் மேம்பாலம் அமைக்கும் பணியைத் தொடங்க உரிய நடவடிக்கை.

19. சாலையில் வசிப்பவர்களுக்கு இருப்பிடம், உணவு, குளியல் அறை, கழிப்பறை வசதியுடன் கூடிய வளாகத்தை வ.உ.சி. பூங்கா பகுதியில் அமைக்க ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு.

20. மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளின் உடல்நலத்தையும், மனதையும் சீராக்கும் வகையில் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்.

21. மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் ஊக்கப்பரிசு வழங்கும் திட்டம் அறிமுகம்.
Last Updated on Thursday, 28 March 2013 09:40