Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

80 அடி ரோடு அமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு ஈரோடு மாநகராட்சிக்கு ரூ.11½ கோடி பற்றாக்குறை பட்ஜெட் பட்ஜெட்டை சமர்ப்பித்த மேயர் மல்லிகா பரமசிவம் அறிவிப்பு

Print PDF
தினத்தந்தி        27.03.2013

80 அடி ரோடு அமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு ஈரோடு மாநகராட்சிக்கு ரூ.11½ கோடி பற்றாக்குறை பட்ஜெட் பட்ஜெட்டை சமர்ப்பித்த மேயர் மல்லிகா பரமசிவம் அறிவிப்பு


ஈரோடு மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் மல்லிகா பரமசிவம் நேற்று சமர்ப்பித்தார். அதில் ரூ.11½ கோடி பற்றாக்குறை இருப்பதாகவும், 80 அடி சாலை அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மாநகராட்சி பட்ஜெட்

ஈரோடு மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மேயர் மல்லிகா பரமசிவம் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.சி.பழனிசாமி, ஆணையாளர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 2013–2014–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை மேயர் மல்லிகா பரமசிவம் சமர்ப்பித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

புதிய வரிகள்

ஈரோடு மாநகராட்சி மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 2013–2014–ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.160 கோடியே 94 லட்சத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் புதிய திட்டங்கள் செயல்படுத்த வேண்டிய வருமானத்தை அதிகப்படுத்த வேண்டியது இருந்தாலும், அரசு ஆணையை நிறைவேற்றும் வகையில் புதிய வரி ஏதும் இல்லாமல் இந்த வரவு –செலவு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் இதுவரை வரிவிதிப்பு செய்யப்படாத இனங்களை கண்டறிந்தும் புதிதாக கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களுக்கும் வரிவிதிக்கப்பட்டு கூடுதலாக ரூ.81 லட்சத்து 12 ஆயிரம் வருமானம் ஈட்ட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதுபோல் மாநகராட்சி கடைகள், சந்தைகள், கழிப்பிடங்கள் போன்றவற்றுக்கு ஏலம் விடுதல், கடைகளின் உரிமங்கள் புதுப்பித்தல் மூலம் ரூ.5 கோடியே 10 லட்சம் வருவாய் ஈட்டப்படும். மேலும் வருவாய் ஈட்டும் வகையில் அப்துல்கனி மார்க்கெட்டில் நவீன வணிக வளாக கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு அனுமதி பெற்று இந்த திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும்.

80 அடி ரோடு

மாநகராட்சி பகுதியில் வருவாய் நிதி, குடிநீர் வடிகால் நிதி மற்றும் கல்வி நிதியில் இந்த ஆண்டு ரூ.85 கோடியே 23 லட்சம் செலவில் திட்டப்பணிகள் செய்யப்பட உள்ளன. மாநகரப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பொருட்டு பிரப் ரோட்டினையும் சென்னிமலை ரோட்டினையும் இணைக்கும் 80 அடி திட்ட ரோட்டினை அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் கூடுதலாக பஸ்நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஊராட்சிக்கோட்டையில் இருந்து குடிதண்ணீர் கொண்டு வரும் திட்டம் ரூ.400 கோடிக்கு தயார் செய்யப்பட்டு உள்ளது.

அரசின் கொள்கை முடிவின் படி ஈரோடு மாநகரப்பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாமல் இருக்க ரூ.66 லட்சம் செலவில் புதிய கழிப்பிடங்கள் கட்டவும், 27 பழைய கழிப்பிடங்கள் பராமரிப்பும் செய்யப்பட உள்ளன. பெரும்பள்ளம் ஓடை சுத்தம் செய்து, கான்கிரீட் தளம் அமைத்து பக்கச்சுவர் கட்டும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

மேம்பாலம்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவில் மேற்கொள்ள மாநகராட்சி மூலம் பரிந்துரைக்கப்படும். ரிங்ரோடு பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளிக்கூடங்களுக்கு கூடுதல் வகுப்பறைகள், புதிய கழிப்பிடங்கள் கட்டவும், பராமரிப்பு பணிகள் செய்யவும் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு முதல் மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் 10 மற்றும் 12–ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். இடையன்காட்டு வலசு மாநகராட்சி பள்ளிக்கூடத்துக்கு ரூ.3½ லட்சம் செலவில் 10 கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும். மாநகராட்சி அலுவலக கட்டிடங்களுக்கு சூரிய சக்தி மின்சாரம் பெறும் வகையில் ரூ.2 கோடியே 20 லட்சத்தில் திட்ட ஒப்புதல் அரசிடம் பெற்று பணிகள் நிறைவேற்றப்படும். மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு ரூ.90 லட்சம் அரசின் நிதி பெறப்படும். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு உள்ள உள்ளாட்சி பகுதிகளில் உள்ள மயானங்கள் மேம்படுத்த ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியில் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்த ஆன்லைன் வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஏ.டி.எம். மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மேயர் மல்லிகா பரமசிவம் கூறினார்.

ரூ.11½ கோடி பற்றாக்குறை

மாநகராட்சியில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள பட்ஜெட்டில் வருவாய் நிதி, மூலதன நிதி, குடிநீர் மற்றும் வடிகால் நிதி, ஆரம்ப கல்வி நிதி ஆகிய மொத்த வருவாய் ரூ.160 கோடியே 94 லட்சத்து 75 ஆயிரமாக உள்ளது. திட்ட மதிப்பீட்டின்படி மொத்த செலவு ரூ.172 கோடியே 49 லட்சத்து 32 ஆயிரமாக உள்ளது. இதன்படி இந்த ஆண்டுக்கான பற்றாக்குறை நிதி ரூ.11 கோடியே 54 லட்சத்து 57 ஆயிரமாக உள்ளது. நிதிப்பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் பஸ்நிலையம், ரெயில் நிலையம் மற்றும் இதர பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் சைக்கிள் நிறுத்தங்கள், 4 சக்கர வாகன நிறுத்த இடங்களுக்கு தனி வரி நிர்ணயம் செய்தும், தனியார் தங்கும் விடுதிகள், ஓட்டல்களுக்கு குடிநீர் வினியோக கட்டணங்கள் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தை தொடர்ந்து சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.