Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்க "எஸ்.எம்.எஸ்' அனுப்பும் முறை!

Print PDF
தினமலர்        03.04.2013

மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்க "எஸ்.எம்.எஸ்' அனுப்பும் முறை!


கோவை:"எஸ்.எம்.எஸ்' மூலம் புகார் தெரிவிக்கும் முறை, கோவை மாநகராட்சியில் நேற்று அமல்படுத்தப்பட்டது.கோவை மாநகராட்சியில் பொதுமக்களுக்காக, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை மாலையும் குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது. மேலும், மாநகராட்சி இணையதளத்தில், "ஆன்-லைன்' மூலமும் புகார் பதிவு செய்யப்படுகிறது. "ஆன்-லைன்' சேவையை மேம்படுத்தி, மாநகராட்சி "பேஸ்புக்' மூலமும் புகார் செய்யும் முறை நடைமுறைக்கு வரவுள்ளது.இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்க "எஸ்.எம்.எஸ்' அனுப்பும் முறை, நேற்று துவங்கப்பட்டது.

மாநகராட்சி மேயர், "எஸ்.எம்.எஸ்' அனுப்பி துவக்கி வைத்தார்.கமிஷனர் லதா கூறியதாவது: மொபைல்போனில் மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்க, பிரத்யேக சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு அருகில் இருக்கும் பிரச்னைகளை வீட்டில் இருந்தவாரே அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம்.இந்த சாப்ட்வேரில், மாநகராட்சியிலுள்ள அதிகாரிகள் மொபைல்போன் எண்கள் வார்டு வாரியாக ஒவ்வொரு பிரிவுக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் குறைதீர்க்கும் புகார் சாப்ட்வேர் மூலம் புகார்கள் பெறப்பட்டதும், அந்தந்த வார்டுக்கான அதிகாரிகளின் மொபைல்போன் எண்ணுக்கு "எஸ்.எம்.எஸ்' சென்று விடும்.புகாரில் குறிப்பிட்டுள்ள இடத்திற்கு அதிகாரிகள் நேரடியாக சென்று, பிரச்னைக்கு தீர்வு காண்பார்கள்.

சீரமைப்பு பணி மேற்கொண்டதற்கான போட்டோவுடன், உயர்அதிகாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.புகாருக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநகராட்சி கமிஷனர், துணைகமிஷனருக்கு "எஸ்.எம்.எஸ்' வந்து விடும். புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி, புகார்தாருக்கும் "எஸ்.எம்.எஸ்' மூலம் பதில் கொடுக்கப்படும்.மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாமில் பெறும் மனுக்கள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பரிந்துரை செய்யப்படும் மனுக்களுக்கும், இந்த சாப்ட்வேரில் பதிவு செய்யப்பட்டு, பதிலளிக்கப்படும்.

மாநகராட்சி இணையதளம் மற்றும் "ஆன்-லைன்' புகார் பணிகள் இரண்டு ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. "எஸ்.எம்.எஸ்' புகார் முறைக்காக கூடுதலாக ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, கமிஷனர் லதா தெரிவித்தார்.துணை கமிஷனர் சிவராசு, செயற்பொறியாளர் சுகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், துணை மேயர், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கோவையில் அறிமுகம்:புகார் செய்வது எப்படி?"எஸ்.எம்.எஸ்' மூலம் புகார் செய்ய, மாநகராட்சி நிர்வாகம் 92822 02422 என்ற மொபைல்போன் எண்ணை அறிவித்துள்ளது. புகார் செய்யும் போது, வார்டு எண், தெரு பெயர், என்ன பிரச்னை என்பதை "டைப்' செய்து அனுப்ப வேண்டும். "குப்பை அகற்றவில்லையா, சாக்கடையில் அடைப்பா, தெருவிளக்கு எரியவில்லையா, குடிநீர் சப்ளை இல்லையா' மொபைல்போனை எடுங்க, மெசேஜ் டைப் செய்யுங்க, மாநகராட்சி அறிவித்துள்ள எண்ணுக்கு அனுப்புங்க! என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இலவச "எஸ்.எம்.எஸ்' சேவை இல்லை, அவரவர் சிம் பிளானுக்கு ஏற்ப கட்டணம் இருக்கும்.