Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவொற்றியூரில் குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்

Print PDF
தினபூமி             07.05.2013

திருவொற்றியூரில் குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/CM-Inagurate(C)_2.jpg
திருவொற்றியூரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3616 அடுக்குமாடிக் குடியிருப்புகள் காணொலிக்காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

சென்னை, மே.7 - தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று (6.5.2013) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் சென்னை, திருவொற்றியூரில் 139 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3616 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை காணொலிக் காட்சி  மூலமாக திறந்து வைத்தார்.

தமிழக கடற்கரை பகுதியிலிருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலினால் பெரும் பாதிப்புக்குள்ளாயின. இதனையடுத்து சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக வங்கி மற்றும் மாநில அரசின் நிதி உதவியுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட 2005-ஆம் ஆண்டு  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா   ஆணையிட்டார்.

குடிசைப் பகுதிகளில் வறிய நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் மழை வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் போன்ற இன்னல்களுக்கு ஆளாகாமல் நல்ல உறைவிடத்தில் சுகாதாரமான சூழ்நிலையில் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில்  தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால், சென்னை, திருவொற்றியூரில் 13.69 ஹெக்டர்  பரப்பளவில், அகில இந்திய வானொலி நில திட்டப் பகுதியில் 139 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியிருப்புகள் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இக்குடியிருப்புகள் உலக வங்கி நிதியுதவியுடன் கூடிய அவசர சுனாமி மறுகுடியமர்வு திட்டம் மற்றும் மாநில நிதியுதவியுடன் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் 113 கட்டட தொகுதிகளாகக் கட்டப்பட்டுள்ள 3616 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை  தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக கட்டப்பட்டுள்ள இப்புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, தெரு விளக்குகள், ஆரம்பப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், நியாய விலைக் கடை, சமுதாயக் கூடம், நூலகம், பூங்கா, நிலத்தடி நீர் தொட்டி போன்ற அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்பு தொகுதிகளில் உள்ள குடியிருப்பு அலகு ஒவ்வொன்றும் 3 லட்சத்து 86 ஆயிரம் பொய் மதிப்பீட்டில் 278 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமங்களிலுள்ள 1941 பயனாளிகள், சென்னை மாவட்டத்தைச் சார்ந்த 15 பகுதிகளிலுள்ள 1014 பயனாளிகள், கட்டமைப்பு விரிவாக்க திட்டத்தினால் பாதிக்கப்பட்ட 661 பயனாளிகள், என மொத்தம்  3616 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் இயற்கை சீற்றங்களிலிருந்து அவர்களை பாதுகாப்பதுடன், நான்கு வழி சாலை விரிவாக்க திட்டங்களுக்கு தேவையான இடத்தை பெறவும், குடிசைகள் இல்லா நகரமாக சென்னையை உருவாக்கிடவும் வழிவகை ஏற்படும்.

இந்த நிகழ்ச்சியில்,  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.