Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அடுத்த மாதத்துக்குள் 6,000 குடிசை மாற்று வீடுகள் தயார்

Print PDF
தினமணி         08.05.2013

அடுத்த மாதத்துக்குள் 6,000 குடிசை மாற்று வீடுகள் தயார்


சென்னை நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு ஜூன் மாதத்துக்குள் தயாராகும் 6,000 குடிசை மாற்று வாரிய வீடுகளில் இடம் ஒதுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக சுமார் 291 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் மழைக்கால நிவாரண இடங்களாக 152 மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூகக் கூடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இப்போது பருவமழைக்குள் அகலப்படுத்தப்படாமல் உள்ள கால்வாய்களை அகலப்படுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நீர்வழிப்பாதைகளில் மழைநீர் வடிவதற்கு தடங்கலாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

சென்னையில் ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள் 6,000 குடிசை மாற்று வீடுகள் தயார் செய்யப்படும். நீர் வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு இந்த குடியிருப்புகளில் இடம் ஒதுக்கப்படும். மேலும் வடகிழக்கு பருவமழைக்குள் அனைத்து வடிகால்வாய் பணிகளும் முடிக்கப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவில்லை.

நீண்ட நாள்களுக்கு பிறகு இப்போதுதான் நடத்தப்படுகிறது என்றும் இனி ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தப்படும் என்றும் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.