Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆரணியில் நவீன எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு வந்தது!

Print PDF
தினமணி        21.05.2013

ஆரணியில் நவீன எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு வந்தது!


ஆரணி நகரில் ரூ.43 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகனமேடை திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.

இந்நகரில் கடந்த 2007-08ஆம் ஆண்டில் கமண்டல நாகநதிக்கரை அருகேயுள்ள சுடுகாட்டில் ரூ.43 லட்சத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்டுமான பணி 3 ஆண்டுகளில் நிறைவு பெற்றது.

இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலிருந்த ஆதரவற்றவரின் சடலம் இங்கு எரியூட்டப்பட்டது. ஆனால் சடலம் சரியாக எரியவில்லை.

இப்பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனத்தினர், மேலும் சிறு பணிகள் நடைபெற உள்ளது. இதனை சீர்செய்து விடலாம்' என்றனர். இதையடுத்து, இப்பணி கிடப்பில் போடப்பட்டது.

இத்தகன மேடையை விரைவாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், நகர மக்களும் வலியுறுத்தி வந்தனர்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் விஜய்பிங்ளே உத்தரவிட்டார்.

இந்நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து ஆதரவற்றவரின் சடலம் ஆரணி தகன எரிவாயு மேடையில் எரித்து சோதனை செய்வதற்கு கொண்டுவரப்பட்டது. திங்கள்கிழமையும் இச்சடலம் எரித்து சோதனையிடப்பட்டது. சரியான முறையில் எரிந்ததாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, இத்தகன எரிவாயு மேடை செயல்முறைக்கு வருவதற்கான ஏற்பாடு செய்யப்படும். இதனை பராமரிக்க தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று நகராட்சி ஆணையர் பா.செல்வம் தெரிவித்தார்.

நகர்மன்றத் தலைவர் ஆனந்தகுமாரி கருணாகரன், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சுரேஷ், ஜெயப்பிரகாஷ், வில்வநாதன், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ராமலிங்கம், பிச்சாண்டி, கவுன்சிலர் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.