Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஐ.டி. நிறுவனங்களுக்கு 200% சொத்துவரி உயர்வு

Print PDF
தினமணி          23.05.2013

ஐ.டி. நிறுவனங்களுக்கு 200% சொத்துவரி உயர்வு

சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சொத்துவரியை 200 சதவீதம் வரை உயர்த்தி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மான விவரம்: கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஐ.டி. நிறுவனங்களை எந்த வகையில் சேர்ப்பது என்பது குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் ஆய்வு நடத்தி ஐ.டி. நிறுவனங்களை சிறப்பு வகை கட்டடங்களாக கருதி புதிய சொத்து வரியை விதிக்க நிர்ணயிக்கப்பட்டு, புதிய வரி விதிப்பு குறித்து அரசிதழிலும் பத்திரிக்கைகளிலும் வெளியிடப்பட்டது.

அதன்படி, அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் உள்ள ஐ.டி. நிறுவனங்களுக்கு 200 சதவீதமும், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு 100 சதவீதமும், வளசரவாக்கம் மண்டலத்தில் 75 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

மேலும் பெருங்குடியில் 60 பைசாவுக்கு மேல் உள்ள ஒவ்வொரு பைசாவிலும் 100 சதவீத உயர்வு வழங்கியும், மாதவரம் மண்டலத்தில் ரூ. 1.20-க்கு மேல் உள்ள ஒவ்வொரு பைசாவுக்கும் 50 சதவீதம் வரி உயர்வு வழங்கியும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சொத்து வரி குறித்து பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்காததால் உயர்த்தப்பட்ட சொத்துவரியை அமுல்படுத்தி வசூலிக்க அரசாணை கோரப்படுகிறது.

இதேபோல, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சமுக நலக் கூடத்தையும்  மாநகராட்சி பராமரிப்பில் எடுத்துக்கொள்வதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.