Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் ‘கண்காணிப்பு கேமரா’ தட்டு, தம்ளர் திருட்டு போவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF
தினத்தந்தி         13.06.2013

கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் ‘கண்காணிப்பு கேமரா’ தட்டு, தம்ளர் திருட்டு போவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை


கோவை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் தட்டு, தம்ளர் திருட்டு போவதை தடுக்க கண்காணிப்பு கேமரா அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

அம்மா உணவகங்கள்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பூ மார்க்கெட், சிங்காநல்லூர் பஸ் நிலையம், மணியகாரன்பாளையம், குறிச்சி மாநகராட்சி அலுவலகம், ராமநாதபுரம் 80 அடி ரோடு, திருமால் வீதி திருமண மண்டபம், புதிய பஸ்  நிலையம், மசக்காளிப்பாளையம், சரவணம்பட்டி அம்மன் நகர், குனியமுத்தூர் ஆகிய 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஒரு இட்லி 1 ரூபாய்க்கும், தயிர் சாதம் ரூ.3–க்கும், சாம்பார் சாதம் ரூ.5–க்கும் விற்பனை  செய்யப்படுகின்றன. காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லியும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை சாம்பார் மற்றும் தயிர் சாதமும் வழங்கப்படுகிறது.

தட்டு, தம்ளர் திருட்டு

இதில் ஒருசில உணவகங்களில் சாப்பிட வந்த பொதுமக்களில் ஒருசிலர் தட்டு, தம்ளரை திருடிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே உணவகத்துக்கு வருபவர்களை கண்காணிப்பதற்காக கேமரா அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். ஒவ்வொரு உணவகங்களிலும் எத்தனை கேமராக்கள் அமைக்கப்படுகிறது? எப்போது வைக்கப்படும் என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–

கண்காணிப்பு கேமரா


கோவை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் ஒரு அம்மா உணவகத்தில் தட்டு, தம்ளர்கள் திருடப்பட்டு உள்ளது. அங்கு வழங்கப்படும் உணவின் விலை குறைவாக இருந்தாலும், தட்டு, தம்ளர்கள் விலை உயர்ந்தது ஆகும். எனவே திருட்டை தடுக்க அனைத்து உணவகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு உணவகங்களின் வெளியில் ஒரு கேமரா, உள்பகுதியில் ஒரு கேமரா என்று 2 கேமராக்கள் வீதம் 10 உணவகங்களிலும் 20 கேமராக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்க மாநகராட்சியில் டி.வி.கள் அமைக்கப்படும். இதற்கு ரூ.2 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

கடும் நடவடிக்கை

இதன்மூலம் உணவகத்துக்கு சாப்பிட வருபவர்களையும், அங்கு வேலை செய்து வருபவர்களையும் கண்காணிக்க முடியும். உணவகங்களில் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் அரிசி மற்றும் காய்கறிகள்  திருட்டையும் தடுக்கவும் இது ஏதுவாக இருக்கும். எனவே அம்மா உணவகத்துக்கு சாப்பிட வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு, தட்டு, தம்ளரை அங்கேயே வைத்து செல்ல வேண்டும். அதை திருடி செல்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சோலார் முறை

மேலும் பூ மார்க்கெட், குறிச்சி உள்பட 3 அம்மா உணவகங்களில் 2 கிலோவாட் மின்சாரம் தயார் செய்யும் வகையில் சோலார் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் ஒவ்வொரு உணவகத்திலும் 10 விளக்குகள், 4 மின்விசிறிகள் மற்றும் ஒரு மிக்சி இயக்கக்கூடிய அளவுக்கு மின்சாரம் கிடைக்கிறது. இதனால் மின்சார செலவு குறைந்து உள்ளது. அதுபோன்று மற்ற உணவகங்களிலும் சோலார் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.