Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மூன்றாக பிரிக்கப்பட்டுள்ள தில்லி மாநகராட்சிகளுக்கு தனித் தனி இணையதளம்

Print PDF

தினமணி               27.06.2013

மூன்றாக பிரிக்கப்பட்டுள்ள தில்லி மாநகராட்சிகளுக்கு தனித் தனி இணையதளம்

தில்லி மாநகராட்சி மூன்றாக பிரிக்கப்பட்டு ஒரு ஆண்டாகியும்  மாநகராட்சிகளுக்கு தனித் தனியான இணையதளங்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை.

அதற்கான பணியில் டெக் மஹேந்திரா நிறுவனம் ஈடுபட்டு வந்த போதிலும், இதுவரை இணையதளங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

அதனால், இப்போதைக்கு மக்கள் பயன்பாட்டுக்கு உதவும் 16 சேவைகளுக்கான மென்பொருள் பயன்பாட்டை மூன்றாகப் பிரிக்க மாநகராட்சிகள் ஒப்புக் கொண்டிருக்கின்றன.

சொத்து வரிச் சேவை, பிறப்பு இறப்புச் சான்றிதழ் முதலான மற்ற பல சேவைகளை இணையதளத்தில் கொண்டுவர 5 ஆண்டுகளாகும் என்று டெக் மஹேந்திரா நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

இருப்பினும் இணையதளங்களை மூன்றாகப் பிரிக்கும் செயல்பாட்டை 4 ஆண்டுகளில் முடித்துவிட முடியும் என்று விப்ரோ நிறுவனம் மாநகராட்சிகளிடம் தெரிவித்துள்ளது. இந்த தாமதத்தை அதிகாரிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

"சொத்து வரிச் சேவை, பிறப்பு இறப்புச் சான்றிதழ் சேவை போன்றவை இப்போதும் தனித் தனி முகவரிகளில் இணையதளச் சேவைகளை வழங்கி வருகின்றன.

அவை ஒரே பக்கத்தில் இல்லாத காரணத்தால் தில்லிவாசிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்' என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, டெக் மஹேந்திரா நிறுவனம் மின் ஆளுமை மென்பொருளில் மாற்றங்களைக்  கொண்டு வருவதற்கான செலவினங்கள் குறித்த அறிக்கையை மாநகராட்சி நிர்வாகங்களுக்கு அளித்துள்ளது.

அதையடுத்து, மின் ஆளுமையில் மாற்றங்கள் செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது. அக்குழு, மூன்று மாநகராட்சிகளும் தனித் தனியாக இணையதளங்களை பயன்படுத்திக் கொள்ள வசதியாக டிசைன்களை உருவாக்கிக் கொள்ள சம்மதித்துள்ளன.