Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் கணினி வரி விதிப்பில் முறைகேடு: போலீஸ் விசாரணைக்கு உத்தரவு

Print PDF

தினமணி                28.06.2013

மாநகராட்சியில் கணினி வரி விதிப்பில் முறைகேடு: போலீஸ் விசாரணைக்கு உத்தரவு

திருநெல்வேலி மாநகராட்சியில் கணினி வரிவிதிப்பில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக காவல் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மேயர் விஜிலா சத்தியானந்த் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இம் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் விஜிலா சத்தியானந்த் தலைமையில் மாமன்ற கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. துணை மேயர் பூ. ஜகநாதன், ஆணையர் த. மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டம் தொடங்கியதும் உத்தரகண்ட் மாநிலத்தில் மழை, வெள்ளத்திற்கு பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்தில் சிக்கித் தவித்த தமிழக பக்தர்களை மீóட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தது, வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசு சார்பில் ரூ. 5 கோடி வழங்கியது, அம்மா மினரல் வாட்டர் திட்டம் அறிவித்தது, பண்ணை பசுமை காய்கறி கடைகள் திறந்தது, கார் சாகுபடிக்கு பாபநாசம் அணையைத் திறக்க உத்தரவிட்டது போன்ற நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் 7 தீóர்மானங்களை மேயர் கொண்டு வந்தார். அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

கணினி வரிவிதிப்பில் முறைகேடு: கூட்டத்தில் முதல் நபராக பேசிய காங்கிரஸ் உறுப்பினர் உமாபதி சிவன், திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற கணினி வரிவிதிப்பு முறைகேடு தொடர்பாக பிரச்னை எழுப்பினார். இந்த முறைகேடு தொடர்பாக மேயரும், ஆணையரும் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்து நீண்ட  விளக்கத்தை மேயர் விஜிலா சத்தியானந்த் அளித்தார். அதன் விவரம்:

 திருநெல்வேலி மாநகராட்சியில் கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் பராமரிப்பிற்கான பணி திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் கணினி நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் மூலம் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்கள் மற்றும் மைய அலுவலகத்தில் 10 கணினி விவரப் பதிவாளர் மற்றும் ஒரு உதவி கணினி அமைப்பாளர் ஆகியோர் கணினி தொடர்பான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு ஈடுபடுத்தப்பட்டுள்ள பணியாளர்களுக்கு சொத்துவரி பெயர் மாற்றம், குடிநீர் கட்டண பெயர் மாற்றும், பிறப்பு, இறப்பு பதிவுகள், கட்டட அனுமதி ஆணைகள் வழங்குதல் குறித்த விவரங்களை கணினியில் பதிந்து, கணினியில் இருந்து ஆணைகள் எடுப்பதற்காக தனி அடையாள குறியிட்டு எண் (மள்ங்ழ் ஐஈ) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி மேலப்பாளையம் மண்டலத்திற்கென 3 அடையாள குறியீட்டு எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த மூன்று அடையாள குறியீட்டு எண்களில் முறைகேடாகப் பதிவுகள் செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக கணினிப் பிரிவு அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 1.4.2012 முதல் 15.6.2013 வரை 56 வரிவிதிப்பு பதிவுகள் முறைகேடாகச் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

 இதில் மேலப்பாளையம் மண்டலத்திற்கு 52, தச்சநல்லூர் மண்டலத்திற்கு 3, திருநெல்வேலி மண்டலத்திற்கு ஒரு வரிவிதிப்பு பதிவுகள் செய்யப்பட்டிருந்தன.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மூன்று மண்டல உதவி ஆணையர்களும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் அறிக்கை சமர்பித்துள்ளனர். இந்த 56 வரிவிதிப்புகளும் விண்ணப்பம் ஏதும் இன்றியும், சம்பந்தப்பட்ட அலுவலர்களின் பரிந்துரை இன்றியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வழக்கமாக மாநகராட்சியில் ஏற்படுத்தப்படும் வரிவிதிப்புகள் அனைத்தும் உரிய விண்ணப்பம் பெற்று, கட்டணம் செலுத்தி சம்பந்தப்பட்ட வார்டு அலுவலக எழுத்தரால் கோப்பு ஏற்படுத்தப்பட்டு, அதில் வரிவசூலர், உதவி வருவாய் அலுவலர், உதவி ஆணையர், தேவைப்படும் இனங்களில் மாநகராட்சி ஆணையர் ஆகியோரின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே கணினியில் வரிவிதிப்புகள் குறித்த பதிவுகள் ஏற்படுத்த வேண்டும். அந்த 56 பதிவுகளிலும் இந்த நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படவில்லை என சம்பந்தப்பட்ட உதவி ஆணையர்கள் தெரிவித்துள்ளதால் இதில் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரியவருகிறது.

இந்த மூன்று அடையாள குறியீட்டு எண்களை அந்த தனியார் கணினி நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேர் கையாண்டு வந்தனர். இந்த முறைகேடுகள் குறித்து புலன் வி+சாரணை நடத்தி அதன், விவரங்களை அளித்திட மாநகர காவல் ஆணையரிடம் கடந்த 20-ம் தேதி நேரில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் புலன் விசாரணைக்கு உத்தரவிட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 இந்த முறைகேட்டில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், அது எந்த அலுவலராக, அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மேயர்.