Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குமரி மாவட்டத்தில் புத்துயிர் பெறும் மழைநீர் சேகரிப்புத் திட்டம்செ. சுரேஷ்குமார்

Print PDF

தினமணி             01.07.2013

குமரி மாவட்டத்தில் புத்துயிர் பெறும் மழைநீர் சேகரிப்புத் திட்டம்செ. சுரேஷ்குமார்

அண்மைக்காலமாக மறக்கப்பட்டும், பராமரிப்பின்றியும் காணப்பட்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்துயிர் பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்திலுள்ள அனைத்துப் பேரூராட்சிகளிலும் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பேரணிகள் சில வாரங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.

குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் கடந்த 2001-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டம் என்ற திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்து கட்டுமானப் பகுதிகளிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டன. வீடுகள், கட்டடங்களின் மேற்கூரைகளிலிருந்து வெளியேறும் மழைநீர்  இதற்காக தயார் செய்யப்பட்ட குழாய் அல்லது அமைப்பு மூலம் தரைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் சேரும் வகையில் மழைநீர் சேகரிப்புத் திட்ட கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன.

இதுதவிர தெருக்களில் மழைநீர் திரண்டுவரும் பகுதிகளை தேர்வு செய்து, அப்பகுதிகளிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது ஆய்வுகளில் தெரியவந்தது.

இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தகவல் மையங்கள் கடந்த சில ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது. பெரும்பாலான வீடுகள் மட்டுமன்றி அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் பராமரிப்பின்றி காணாமல் போய்விட்டன. சில கட்டமைப்புகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குச் செல்லும் குழாய்கள் சேதமடைந்துள்ளன. சில பகுதிகளில் மழைநீர் சேகரிப்புத் திட்ட கட்டமைப்புகள் மழைநீரை உறிஞ்சும் தன்மையை இழந்து காணப்படுகிறது. இதனால் மழைநீர் சேகரிப்புத் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதி தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்புத் திட்ட கட்டமைப்புகள் பெரும்பாலானவை அடையாளம் தெரியாமல் அழிந்துள்ளன. உள்ளாட்சிகளில் புதிதாக போடப்படும் தார்ச் சாலைகள், சிமென்ட் சாலைகளின் ஓரங்களில் மழைநீர் கட்டமைப்புகளை உருவாக்காமல் சாலைப் பணிகள் மேற்கொள்வதால், மழைநீர் நேரடியாக நிலத்தில் சேரும் நிலை தடுக்கப்பட்டு வருகிறது.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததையடுத்து கடந்த ஏப்ரல், மே மாதங்களில் குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டதுடன், கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பேரூராட்சிகள் சார்பில் மழைநீர் சேகரிப்பு திட்ட விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இத்திட்டம் மீண்டும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைப்பதுடன், இல்லாத இடங்களில் கட்டமைப்புகளை அமைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் வரும் ஆண்டுகளில் கோடையை சமாளிக்க முடியும் என்கிறார் சமூக ஆர்வலரும், வாறுதட்டு அன்னை தெரசா இளைஞர் இயக்க தலைவருமான என்.எம். பிரேம்ராஜ்.

வரும் காலங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அரசு கட்டாயமாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.