Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"100 சதவீத தேர்ச்சியே மாநகராட்சி பள்ளிகளின் இலக்கு': ஆலோசனைக்கூட்டத்தில் பெருமிதம்

Print PDF
தினமலர்        10.07.2013

"100 சதவீத தேர்ச்சியே மாநகராட்சி பள்ளிகளின் இலக்கு': ஆலோசனைக்கூட்டத்தில் பெருமிதம்

கோவை : ""மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்'' என, மாநகராட்சி பள்ளிகளின் கல்வித்திறன் மேம்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி மற்றும் அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் (எ.ஐ.எப்.,) சார்பில், மாநகராட்சி பள்ளிகளின் கல்வித்திறன் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், தேசிய அளவில் டிஜிட்டல் ஈகுவலைசர் புரோகிராம் செயல்படும் பள்ளிகளுக்கு இடையே "சிறிய யோசனை பெரிய வித்தியாசம்' என்ற தலைப்பில் நடந்த போட்டியில், மாநிலத்தில் முதலிடம் பெற்ற மூலிகை தோட்டம் என்ற செயல்திட்டத்திற்கு, வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

கோடை கால கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு மேயர், கமிஷனர் லதா ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். மேலும், பல்வேறு தலைப்புகளில் குறும்படம் தயாரித்த, ஐந்து பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அப்போது, கோவை மேயர் பேசியதாவது : அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் சார்பில், மாநகராட்சி பள்ளிகளில், கல்வியில் பின்தங்கிய மாணவர்களில் ஐந்து சதவீதம் பேரை தேர்வு செய்து, சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும். மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகளை மிஞ்சிவிட்டன, என்றார்.

மாநகராட்சி கமிஷனர் லதா பேசியதாவது : அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன், மாநகராட்சி நிர்வாகம், ஆசிரியர்கள் இணைந்து செயல்படுவதால், "டிஜிட்டல்' கல்வி முறை மாணவர்களை சென்றடைந்துள்ளது. வரும் ஆண்டில், கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களை தேர்வு செய்து, சிறப்பு பயிற்சி கொடுக்கும் போது, தேர்வில் யாரும் தோல்வி அடையமாட்டார்கள். இந்த கல்வியாண்டில், மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும், என்றார்.

அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் மாநில ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் பேசியதாவது :

மாநகராட்சி மற்றும் பவுண்டேஷன் சார்பில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளியில், கம்ப்யூட்டர் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஐந்து பள்ளி மாணவர்களுக்கு குறும்படம் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது, என்றார்.