Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை மாநகராட்சி பள்ளி நூலகங்களுக்கு ரூ.2.40 லட்சம் புத்தகங்கள்

Print PDF

தினமணி              24.07.2013

மதுரை மாநகராட்சி பள்ளி நூலகங்களுக்கு ரூ.2.40 லட்சம் புத்தகங்கள்

  மதுரை மாநகராட்சி பள்ளி நூலகங்களுக்கு ரூ. 2.40 லட்சம் மதிப்பிலான நூல்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டன.

  மதுரை மாநகராட்சி பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா, செவ்வாய்க்கிழமை மடீட்சியா அரங்கில் நடைபெற்றது. இதில், பள்ளிகளிலுள்ள நூலகங்களுக்கு புதிதாக ரூ. 2.40 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள புத்தகங்களை, அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா வழங்கிப் பேசியதாவது:   புத்தகங்கள் படிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எந்த வகையிலும கிடைக்காது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சிறந்த புத்தகங்களின் மதிப்பு குறையாது. ஆசிரியர்கள் பாடத்தைக் கற்றுக் கொடுப்பதுடன், மாணவர்களுக்குப் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். புத்தகங்களை வாசித்தவர்கள் வாழ்வில் தோற்றதில்லை.

  எளிமையான வாக்கியங்களைக் கொண்ட புத்தகங்கள் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு வாங்கித் தரப்பட்டுள்ளன. பாடப் புத்தகங்களை படிக்கும் நேரம் போக, மீதியுள்ள நேரங்களில் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். 10-க்கும் மேற்பட்ட புத்தகங்களை படிக்கும்போது, எழுதும் பழக்கம் தானாக வந்துவிடும். நல்ல எழுத்தாளர்களாகவும் உருவாகலாம். மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் நல்ல எழுத்தாளர்களாகவும் வரவேண்டும், என்றார்.

  விழாவுக்கு முன்னிலை வகித்த ஆணையர் ஆர். நந்தகோபால் பேசியது: மதுரை மாநகராட்சியில் 28 ஆரம்பப் பள்ளிகள், 14 நடுநிலைப் பள்ளிகள், 9 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 15 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 66 பள்ளிகள் இருக்கின்றன. இந்தப் பள்ளிகள் தமிழ்ச் சான்றோர்களின் பெயர்களில் இயங்கி வருகின்றன. மாணவர்கள் தாம் படிக்கும் பள்ளியின் பெயரைத் தாங்கி நிற்கும் சான்றோர்களின் சிறப்புக்களையும் அறிந்து கொள்ளவேண்டும். மாணவப் பருவத்தில் புத்தகங்கள் தான் சிறந்த தோழர்களாகவும், வழிகாட்டியாகவும் திகழும்.

  மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களைப் படித்து, சிறந்த அறிஞர்களாகவும், மேதைகளாகவும் உருவாக வேண்டும், என்றார்.

  பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளி நூலகத்தை நல்ல முறையில் பராமரித்து வருவதற்காகவும், அதிக நூல்களை நூலகத்துக்கு வாங்கித் தந்தமைக்காகவும், நூலகர் கனகதுர்க்காவுக்கு சிறந்த நூலகருக்கான பாராட்டுச் சான்றிதழை மேயர் வழங்கினார்.

  இந்த விழாவில், துணை மேயர் ஆர். கோபாலகிருஷ்ணன், உதவி ஆணையர் ஆ. தேவதாஸ், மண்டலத் தலைவர்கள் ஜெயவேல், ராஜபாண்டியன், கல்விக் குழுத் தலைவர் சுகந்தி அசோக், மாநகராட்சி கல்வி அலுவலர் மதியழகராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவியர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.