Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை மாநகராட்சி நடத்தும் 200 அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா

Print PDF

மாலை மலர்                 24.07.2013

சென்னை மாநகராட்சி நடத்தும் 200 அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
 

ஏழை, எளியவர்கள், கூலி வேலை செய்பவர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவர்கள் குறைந்த செலவில் வயிறாற சாப்பிட வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அனைத்து மாநகராட்சி பகுதிகளுக்கும் அம்மா உணவகம் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

ஒரு ரூபாய்க்கு இட்லி, மதியம் சாம்பார் சாதம், தயிர்சாதம், கருவேப்பிலை சாதம் போன்றவை வழங்கப்படுகிறது. காலை மற்றும் மதியம் இரண்டு வேளைக்காக செலவிடப்படும் சாப்பாட்டு செலவு இதனால் குறைவதால் அம்மா உணவகங்களில் கூட்டம் அலை மோதுகிறது.

இதைத் தொடர்ந்து சென்னையில் 7 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகத்தை திறக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதலில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் திறப்பதற்காக அனைத்து ஏற்பாடும் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கான கட்டிடம் கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. அரசு பொது ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், உறவினர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் அங்கு மற்ற இடங்களை விட சமையல் அறை, சாப்பிடும் இடம் போன்றவை மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. புதிய உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. அங்கு தினமும் 10 ஆயிரம் இட்லி 5 ஆயிரம் சாதம் வகைகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைகள், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு ஆஸ்பத்திரி, வண்ணாரப்பேட்டை ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகளிலும் அம்மா உணவகம் திறக்க இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளன.

தற்போது நடந்து வரும் 200 அம்மா உணவகங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க கேமரா பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உணவு தயாரித்தல், பரிமாறுதல், ஊழியர்கள், பொது மக்களிடம் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை மாநகராட்சியில் இருந்தவாறு கண்காணிக்க இருக்கிறார்கள்.

இதற்காக 200 நவீன கேமிராக்கள் வாங்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அம்மா உணவகங்களிலும் கேமராக்கள் பொறுத்தும் பணி தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.