Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் திருட்டைத் தடுக்க நீரேற்று நிலையங்களில் தானியங்கி முறை

Print PDF

தினமணி                31.07.2013 

குடிநீர் திருட்டைத் தடுக்க நீரேற்று நிலையங்களில் தானியங்கி முறை

கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள கம்ப்யூட்டர் பில்லிங் முறை. (வலது) தானியங்கி முறையில் நீர் நிரப்பப்படும் லாரி. (உள்படங்கள்) எலெக்ட்ரோ மேக்னடிக் ஃப்ளோ மீட்டர் மற்றும் காற்று அழுத்த வால்வு .
கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள கம்ப்யூட்டர் பில்லிங் முறை. (வலது) தானியங்கி முறையில் நீர் நிரப்பப்படும் லாரி. (உள்படங்கள்) எலெக்ட்ரோ மேக்னடிக் ஃப்ளோ மீட்டர் மற்றும் காற்று அழுத்த வால்வு .

லாரி குடிநீர் திருட்டைத் தடுக்க, சென்னை குடிநீர் வாரிய நீரேற்று நிலையங்கள் கணினிமயமாக்கப்பட்டு தானியங்கி முறையில் செயல்பட உள்ளன.

முதல் கட்டமாக கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்தில் தானியங்கி முறை அமல்படுத்தப்பட்டு, சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முறை, அனைத்து நீரேற்று நிலையங்களிலும் அமல்படுத்தப்படும் பட்சத்தில் குடிநீர் சேதாரம் மற்றும் திருட்டு பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என குடிநீர் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3.3 கோடி லிட்டர் விநியோகம்: சென்னை குடிநீர் வாரியத்தின் கீழ் 30 நீரேற்று நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த நீரேற்று நிலையங்களில் 398 லாரி மூலமாக நாளொன்றுக்கு 3.3 கோடி லிட்டர் குடிநீர் நிரப்பப்படுகிறது. நாள்தோறும் சுமார் 3,800 நடைகளில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நகரில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையைப் பயன்படுத்தி, சில லாரி டிரைவர்கள் குடிநீரை அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்தன.

இது தவிர, நீரேற்று நிலையங்களில் லாரிகளில் நீர் நிரப்பும் போது அதிக அளவில் குடிநீர் சேதாரம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. இவற்றைக் கருத்தில் கொண்டு அரசின் ஒப்புதலுடன் குடிநீர் வாரியம், தானியங்கி நீரேற்று நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

கீழ்ப்பாக்கத்தில் தானியங்கி நீரேற்று நிலையம்: இந்த திட்டத்தின் முதல் முயற்சியாக கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்தில் தானியங்கி முறை அமல்படுத்தப்பட்டு முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குடிநீர் வாரிய உயர் அதிகாரி கூறியதாவது:-

சென்னையின் பழமையான நீரேற்று நிலையங்களில் ஒன்றான கீழ்ப்பாக்கத்தில் நாளொன்றுக்கு 42 லாரிகளில் 250 முறை குடிநீர் நிரப்பப்படுகிறது. மொத்தம் 7 நீர் நிரப்பும் குழாய்கள் இங்கு உள்ளன.

ஒவ்வொரு நீர் நிரப்பும் குழாயிலும் எலெக்ட்ரோ மேக்னடிக் ஃப்ளோ மீட்டர் கருவி மற்றும் காற்று அழுத்தத்தில் செயல்படும் வால்வு பொருத்தப்பட்டுள்ளன. எலெக்ட்ரோ மேக்னடிக் ஃப்ளோ மீட்டர் கருவி மூலம் குழாய் வழியே எத்தனை லிட்டர் தண்ணீர் செல்கிறது என்பதைக் கண்காணிக்க முடியும்.

குறிப்பிட்ட அளவு தண்ணீர் லாரிகளில் நிரப்பப்பட்ட பிறகு காற்று அழுத்த வால்வுக் கருவியின் மூலம் தானாகவே நீர்வரத்து நின்று விடும். பெட்ரோல் பங்க்-குகளில் உள்ள முறையைப் போல செயல்படும் இந்த திட்டத்தின் மூலம் மிகச் சரியான அளவு தண்ணீர் லாரிகளில் நிரப்பப்படும்.

லாரிகளில் எவ்வளவு நீர் நிரப்பப்பட்டுள்ளது, எங்கு விநியோகிக்கப்பட உள்ளது உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் கணிணியில் பதிவு செய்யப்படும். அந்தத் தகவல்கள் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால் குடிநீர் வாரிய அதிகாரிகள் அவற்றை எந்த இடத்தில் இருந்தும் கண்காணிக்க முடியும்.

4 நிமிடத்தில் நீர் நிரப்பப்படும்: தானியங்கி நீரேற்று நிலையத்தில் 9 ஆயிரம் கொள்ளளவுக் கொண்ட லாரியில் நீர் நிரப்ப 4 நிமிஷங்கள் மட்டுமே ஆகும். இதன் மூலம் விரைவாக குடிநீர் விநியோகம் செய்ய முடியும்.

இந்தத் திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் அனைத்து நீரேற்று நிலையங்களிலும் தானியங்கி முறை செயல்படுத்தப்படும்.

விரைவில் ஜி.பி.எஸ். திட்டம்: குடிநீர் திருட்டைத் தடுக்க, லாரிகள் செல்லும் வழித்தடங்களைக் கண்காணிக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டன. இன்னும் ஒரு வாரத்தில் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது என்றார் அவர்.