Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கல்விச் சுற்றுலா: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் வடமாநிலம் பயணம்

Print PDF

தினமணி             24.09.2013

கல்விச் சுற்றுலா: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் வடமாநிலம் பயணம்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்று வரும் 50 மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக மகாராஷ்டிரத்துக்கு புதன்கிழமை (செப்டம்பர் 25) செல்கின்றனர் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் அவ்வப்போது கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக பல்வேறு மாநகராட்சிப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 50 மாணவ, மாணவிகள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

8 நாள் கல்விச் சுற்றுலாவில் மும்பை, புணே, அஜந்தா, எல்லோரா, ஒüரங்காபாத் ஆகிய பகுதிகளுக்கு சென்று வரலாற்று சிறப்புமிக்க இடங்களை மாணவர்கள் பார்வையிடவுள்ளனர். சுற்றுலா செலவுகளை மாநகராட்சியே ஏற்கும்.

கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநகராட்சிப் பள்ளிகள் அளவில் முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்கள் இந்த சுற்றுலாவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலாவுக்குத் தேர்வான மாணவர்கள், திங்கள்கிழமையன்று மேயர் சைதை துரைசாமியை சந்தித்தனர். பின்னர் அவர்களுக்கு சுற்றுலாவுக்கு துணிகள் எடுத்துச் செல்ல வசதியாக பைகள் வழங்கப்பட்டன.

இந்த சுற்றுலாவுக்காக மாநகராட்சி சார்பில் ரூ.4.83 லட்சம் செலவிடப்படுகிறது. 50 மாணவர்கள் 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு உதவி கல்வி அலுவலர் சுற்றுலா செல்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.