Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"ஒவ்வொரு மரமும் ஒரு ஆக்சிஜன் தொழிற்சாலை' "பசுமை அன்னூர்' திட்டம் துவக்கம்

Print PDF

தினமலர்              26.09.2013

"ஒவ்வொரு மரமும் ஒரு ஆக்சிஜன் தொழிற்சாலை' "பசுமை அன்னூர்' திட்டம் துவக்கம்

அன்னூர்:"மக்கள் தொகைக்கு இணையாக மரங்கள் நட வேண்டும்,' என, அன்னூரில் நடந்த விழாவில் "சிறுதுளி' அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் தெரிவித்தார்.

அன்னூர் பேரூராட்சி சார்பில், "பசுமை அன்னூர்' என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேரூராட்சியில் 2,000 மரக்கன்றுகளை நட்டு, மூங்கில் வளைய வேலி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்ட துவக்க விழா நேற்று சொக்கம்பாளையத்தில் நடந்தது. "சிறுதுளி' அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், மரக்கன்றை நட்டு, விழாவை துவக்கி வைத்து பேசியதாவது: மகாத்மா காந்தி வந்த கிராமத்தில் இத்திட்டம் துவக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. சிறுதுளி சார்பில், இதற்கு 1,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் மரக்கன்று வழங்கி, ஒவ்வொரு மாணவனும் ஒரு மரம் நட்டு பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம்.

இயற்கையை நாம் போற்றி பேணினால், அது நம்மை காக்கும். 320 ஏக்கர் கொண்ட உக்கடம் குளத்தை தூர் வாரியதால், இப்போது அங்கு தண்ணீர் கடல் போல் நிற்கிறது. அனைவராலும் தூர் வார முடியாது. ஆனால், மரக்கன்று நட எல்லோராலும் முடியும். "சிறுதுளி' சார்பில் "பசுமை பஞ்சாயத்து' என்னும் திட்டத்தை துவக்கி உள்ளோம். ஒரு ஊரில் எவ்வளவு மக்கள் தொகை உள்ளதோ அதற்கு இணையாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு மரமும், ஒரு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.

இவ்வாறு, வனிதா மோகன் பேசினார். கோவை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திருஞானம் பேசுகையில்,"" அன்னூர் பேரூராட்சியில், 4,000 வீடுகளிலும், கோவை மாவட்டத்தில், 37 பேரூராட்சிகளில், ஒரு லட்சத்து 25 ஆயிரம் வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

நாவல், புங்கன், வாகை, வேம்பு, குமிழி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. பேரூராட்சி தலைவர் ராணி தலைமை வகித்தார். செயல் அலுவலர் கல்யாண சுந்தரம் வரவேற்றார்.

மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி, துணை தலைவர் விஜயகுமார், கவுன்சிலர்கள் பூமணி, ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.